திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருஆடிப்பூர உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். ஜூலை 23ல் கொடியேற்றத்துடன் உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் ஆண்டாள், பெருமாள் வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று பள்ளியறையிலிருந்து புறப்பாடாக காலை 9:40 மணிக்கு ஆண்டாளும் பெருமாளும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:45 மணி அளவில் தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. சுற்று வட்டாரக் கிராமத்தினர் உற்சாகமாக தேரோட்டத்தில் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணி அளவில் தீர்த்தவாரியும், மாலையில் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளலுடன் உற்ஸவம் நிறைவடையும்.