பழநி: பழநி, கிழக்கு கிரி வீதி அழகு நாச்சியம்மன் கோயில் பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அடிவாரம், கிழக்கு கிரி வீதி, அழகு நாச்சியம்மன் கோயில் தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவதை முன்னிட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்துடன் கும்ப கலசங்கள் வைத்து கணபதி பூஜை, வேத மந்திரங்கள் முழங்க திசா ஹோமம் பூஜை நடந்தது. கும்ப கலசங்களுக்கு தீபாதாரணை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கும்ப கலச புனித நீரில் அழகு நாச்சிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்து தீபாதாரணை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்த விலாஸ் செல்வகுமார், பிரேமா,நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன், கோயில் கண்காணிப்பாளர் ராஜா, முன்னாள் கண்காணிப்பாளர் முருகேசன், பெரியநாயகி அறக்கட்டளை சுந்தரம் மற்றும் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.