உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.
அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் இன்று காலை ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து கால சாந்தி பூஜை, சகஸ்ரநாம பூஜை, புஸ்பாஞ்சலி நடைபெற்றது. இன்று காலை ஹனுமன் சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதிகாலை முதல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனம் செய்த பக்தர்களுக்கு துளசி மாலை, வாழைப்பழம், கேசரி, சர்க்கரை பொங்கல், வடை போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் பக்தர்களும் பிரசாதங்களை வழங்கினார். அன்னதானம் நடைபெற்றது. ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மூலவர் சன்னதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு என்பதால் அவருக்கு பிரியமான வடைமாலை சாத்தவில்லை என்றும், அவரின் பக்தர்களுக்கு வடைகள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.