பதிவு செய்த நாள்
11
மார்
2023
06:03
வடவள்ளி: வடவள்ளியில் உள்ள மருதமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான வணிகவளாக கட்டடத்தை, பல ஆண்டுகளுக்குபின், புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மருதமலை ரோடு, வடவள்ளியில், மருதமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, அறநிலையத்துறை சார்பில், 10 கடைகள் அடங்கிய வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டது. இக்கடைகள் ஏலம் விடப்பட்டது. முக்கிய பகுதியில் வணிக வளாகம் அமைந்திருந்தாலும், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததாலும், அதிக வாடகை நிர்ணயித்ததாலும், யாரும் கடையை எடுக்க முன்வரவில்லை. இதனால், இந்த வணிக வளாக கட்டடம் பராமரிப்பின்றி வீணாகி வந்தது. இந்நிலையில், தற்போது, வணிக வளாக கட்டடத்தை புனரமைக்கும் பணியை, மருதமலை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. இதனால், விரைவில், வணிக வளாகம் புதுப்பொலிவு பெற்று, மீண்டும் ஏலம் விடப்பட்ட உள்ளது. இதனால், கோவிலுக்கும் வருமானம் கிடைக்கும். இதுகுறித்து மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்சினியிடம் கேட்டபோது,"வணிக வளாகத்தை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்படும். அடுத்த மாதம், வணிக வளாக கடைகள் ஏலம் விடப்படும்,"என்றார்.