பதிவு செய்த நாள்
11
மார்
2023
06:03
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புதிதாக தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், சனி மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் வந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், குழந்தைக்கு பாலூட்டுவதற்கு என, தனியாக அறை இல்லாததால், மறைவான இடத்தில் அமர்ந்து, குழந்தைகளுக்கு பாலூட்டி வந்தனர். இதை அறிந்த காரமடை ரோட்டரி சங்கமும், சவுமியா மருத்துவமனையும் இணைந்து, காரமடை அரங்கநாதர் கோவிலில், தாய்மார்கள் பாலூட்டும் அறையை அமைத்தனர். இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சவுமியா மருத்துவமனை தலைமை டாக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார். டாக்டர் சவுமியா வதனா வரவேற்றார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், காரமடை ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோர் பங்கேற்றனர். ரோட்டரி சங்க செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.