ராமேஸ்வரம் கோயில் திருமண மண்டபம் ; அன்னதான கூடமாக மாறியது : ஹிந்து முன்னணி எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2023 07:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் திருமண மண்டபத்தை, அன்னதான கூடமாக மாற்றிய நிலையில், அமைச்சர் சேகர்பாபு புதிய திருமண மண்டபம் அமைக்கப்படும் என கூறியதற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு நந்தவனத்தில் 3 ஆண்டுக்கு முன் ராம்கோ குரூப் ராமசுப்பிரமணிய ராஜா ரூ. 3 கோடியில் திருமண மண்டபம் கட்டிக் கொடுத்தார். இங்கு சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் மற்றும் பொதுமக்களின் கல்யாணம் நடந்தது. ஆனால் இங்கு கடந்த ஜன., முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் கூடமாக மாற்றியதால், பொதுமக்கள் திருமணம் நடத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இங்கு சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் நடக்குமா என பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு, ரூ. 3 கோடி செலவில் ராமேஸ்வரம் கோயிலில் புதிய திருமண மண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் தெரிவித்ததற்கு ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறுகையில் : நன்கொடையாளர் கட்டி கொடுத்த திருமண மண்டபத்தை அன்னதான கூடமாக மாற்றியதால், இனிவரும் காலத்தில் எந்த நோக்கத்திற்காக கோயிலுக்கு நன்கொடை கொடுத்தோமோ, அது சிதைந்து போகிறதே என கொடையாளர்கள் நினைக்க கூடும். இதனால் தானம் கொடுக்க தயங்குவார்கள். எனவே தற்போதைய அன்னதானம் கூடத்தை மீண்டும் திருமண மண்டபமாக மாற்றி, கோயில் வளாகத்திற்குள் புதியதாக அன்னதானம் கூடம் அமைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட வேண்டும் என்றார்.