மகா சங்கடஹர சதுர்த்தி; வேதங்கள் போற்றும் வேழமுகத்தோனை வழிபட வேண்டியது கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2024 10:08
ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி ஆகும். மாலை சந்திரனை தரிசித்து விட்டு அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபட வேண்டும். அனைத்து வித சுப காரியம் துவங்க சிறந்த நாள் மஹா சங்கடஹர சதுர்த்தி. நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும்.
சதுர்த்தியின் மகிமை : சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான். இன்று வீட்டில் விநாயகரை வழிபட வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும்!