கடலாடியில் தசரா ஊர்வலம்: குலசேகரப்பட்டினத்தில் இருந்து தீர்த்த குடம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2026 05:10
கடலாடி: கடலாடியில் பத்திர அலுவலகம் அருகே பத்ரகாளி அம்மன் தசரா குழு இயங்கி வருகிறது.
இங்கு 8ம் ஆண்டு மாகாளி பூஜை மற்றும் 4ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதிகாலை குலசேகரப்பட்டினத்தில் இருந்து கடலில் தீர்த்தம் ஆடி அங்கிருந்து தீர்த்த குடம் சுமந்து கொண்டுவரப்பட்டது. மேலக்கடலாடி மங்கள விநாயகர் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க முத்தாரம்மன் கோயிலுக்கு ஏராளமான நேர்த்திக்கடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மதியம் மற்றும் இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இரவு 12:00 மணிக்கு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் உருவம் அமைத்து, காளி மற்றும் கருப்பன் உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டு மாகாளி பூஜை செய்யப்பட்டு 11 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்று மாலை 4:00 மணிக்கு காளி பக்தர்கள் பல்வேறு வகையான வேடங்களை அணிந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து முளைப்பாரியை மேலக்கடலாடி ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கடலாடி பத்ரகாளி அம்மன் தசரா குழுவினர் செய்திருந்தனர்.