அயோத்தி ராமர் கோவிலில் விஜயதசமி விழா கோலாகலம்! ராம்லல்லாவுக்கு மகாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2026 09:10
அயோத்தி, விஜயதசமியை முன்னிட்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், ஆன்மிகச் சடங்குகளும் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றன.
விஜயதசமி நாளில் குழந்தை வடிவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராம்லல்லாவுக்கு பஞ்சாமிர்த மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி ஆயுத பூஜை நடத்தப்பட்டு, ராமருக்கு 56 வகையான உணவுப் பொருட்கள் அடங்கிய ‘சப்பன் போக்’ நைவேத்தியமாகப் படைக்கப்பட்டது. துர்கா தேவியின் ஆயுதங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
18 சிறுமிகளுக்கு பாதபூஜை: ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில், இந்த ஆண்டு சிறப்பு முயற்சியாக கன்னியா பூஜை நடத்தப்பட்டது. கோவில் யாகசாலையில் 18 சிறுமிகளின் பாதங்களைக் கழுவி, அவர்களைத் தேவி அம்சமாகக் கருதி வழிபட்டனர். பின்னர் சிறுமிகளுக்கு பாரம்பரிய உணவு வழங்கப்பட்டதுடன், பரிசுப் பொருட்களும் தட்சிணையும் அளிக்கப்பட்டன. பெண் குழந்தைகளில் தெய்வீக சக்தியைக் காணும் இந்த வழிபாடு, பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.
நவராத்திரி வழிபாடுகள் நிறைவு:இந்த நிகழ்வுகளுக்கு ஸ்வாமி தினேந்திர தாஸ் தலைமை யஜமானராகப் பங்கேற்றார். ஒன்பது நாட்கள் நடைபெற்ற சாரதீய நவராத்திரி வழிபாடுகளின் நிறைவாக விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ராமர் கோவிலில் நடைபெற்ற மகாபிஷேகம், ஆயுத பூஜை, சப்பன் போக் நைவேத்தியம் மற்றும் கன்னியா பூஜை ஆகியவை சனாதன மரபுகளின் ஆன்மிகச் சிறப்பையும் பாரம்பரியத்தையும் எடுத்துரைத்தன.