பதிவு செய்த நாள்
21
அக்
2026
06:10
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட யானைகள், பாரம்பரியக் கலைக் குழுக்கள் மற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுக்கும் இந்த ஊர்வலம், 11 நாட்களாக நடைபெற்ற தசரா விழாவின் முக்கிய நிகழ்வாகும்.
இன்று மாலை ஜம்பூ சவாரி ஊர்வலம் தொடங்கியது. மைசூர் தசரா திருவிழாவின் பிரம்மாண்டத்தின் அடையாளமான ஜம்பூ சவாரியைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில், அரண்மனை வளாகத்தில், மீன லக்னத்தின் சுப வேளையில், மாநிலத்தின் காவல் தெய்வமான அன்னை சாமுண்டேஸ்வரிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் ஆகியோர் தசரா ஜம்பூ சவாரி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
முதல் முறையாக தங்க அம்பாரி சுமந்த பிரசாந்தா!
இந்த ஆண்டின் தசரா விழாவில் முக்கிய அம்சமாக, பிரசாந்தா என்ற யானை முதல் முறையாகத் தங்க அம்பாரியைச் சுசுமந்தது. இதற்காக வனத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனின் உற்சவர் சிலை, ஊர்வலத்துக்காக மைசூரு அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டு, அந்தச் சிலை தங்க அம்பாரியில் வைக்கப்பட்டது. முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அம்மனுக்கு மலர் தூவி ஜம்பூ சவாரி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.
நந்தி கொடிக்கு சிறப்பு பூஜை!
ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக, முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நந்தி கொடிக்கு சிறப்புப் பூஜை செய்தார். இதையடுத்து, பாரம்பரியக் கலைக் குழுக்கள் மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
6,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!
விழாவை முன்னிட்டு மைசூரு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான 21 அதிகாரிகள் அடங்கிய குழு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறது.
இரவில் தீப்பந்த அணிவகுப்பு!
தசரா விழாவின் நிறைவு நிகழ்வாக, இன்று மாலை பன்னிமண்டப மைதானத்தில் பாரம்பரிய தீப்பந்த அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே, மைசூரு அரச குடும்பத்தின் சார்பில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. அரச குடும்ப வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற பாரம்பரிய ‘விஜய யாத்திரை’ நிகழ்வில் பங்கேற்றார்.
இந்த ஆண்டு நடைபெறாத பாரம்பரிய மல்யுத்தம்!
மைசூரு அரண்மனையில் அரச குடும்பத்தினர் மற்றும் அழைப்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும் பாரம்பரிய ‘வஜ்ர முஷ்டி கலகா’ மல்யுத்தப் போட்டி, இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் இந்தப் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், போட்டி நடைபெறாததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
பாரம்பரியம், ஆன்மிகம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரம்மாண்ட ஊர்வலங்கள் என மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், ஜம்பூ சவாரி மற்றும் தீப்பந்த அணிவகுப்புடன் தசரா விழா நிறைவடைகிறது.