மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பத்து கேவ்ஸ் என்ற இடத்தில் உலகப் புகழ்பெற்ற சுப்ரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு சுப்ரமணியர் சுவாமி 140 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இந்த ஆண்டு சிறப்பு நவராத்திரி பெருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அம்சமாக 2–வது சர்வதேச நாட்டிய அர்ப்பண நிகழ்ச்சி இடம் பெற்றது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த அவுட்லாஸ்டர்ஸ் டான்ஸ் ஸ்கூல் நடனப் பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் அபாரமான பரதநாட்டியத்தால் மலேசிய வாழ் கலைப் பிரியர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டனர். சலங்கை ஒலியும், பக்திப் பாடல்களின் மெல்லிசையும், மாணவர்களின் நளினமான பாவங்களும், கரவொலியால் அரங்கை அதிரச் செய்தனர். இந்த ஆன்மிகக் கலை நிகழ்வில் நடனக் குரு ஸ்டாலின் தலைமையில் பங்கேற்ற இளம் நாட்டியக் கலைஞர்கள் வரூன், விவேக் குமார், கமலேஷ், பாரத், இலக்கியா, மித்ரா, திவ்யா ஸ்ரீ ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ், நினைவு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. கடல் கடந்து சென்று, மலேசிய முருகன் திருத்தலத்தில் புதுச்சேரியின் கலாசாரத்தையும் கலைப் பாரம்பரியத்தையும் பறைசாற்றிய கலை குழுவினருக்கு மலேசியா கலை விரும்பிகளும் பக்தர்களும் பாராட்டு தெரிவித்தனர்.