இன்று பாபாங்குசா ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட 10 தலைமுறைக்கும் மோட்சம் கிடைக்கும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2026 11:10
ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, பாபாங்குசா ஏகாதசி என்று பெயர். ஒருவருடைய பாவத்தை அகற்றும் அங்குசம் போன்றது என்பதால் இந்தப் பெயர் வந்தது.. இந்த ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம், நூறு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
எமதர்மன் ஒருமுறை பெருமாளைச் சந்தித்தான். கருடவாகனத்தில் தனது உலகமான எமலோகத்திற்கு எழுந்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மகாவிஷ்ணுவும் ஒப்புக்கொண்டு வந்தார். அவரை எமதர்மன் மகிழ்ச்சியோடு வரவேற்றான். எமலோகத்தின் தெற்கு திசையில் இருந்து அழுகையும், கூக்குரலும் கேட்டது. குரல் கேட்ட திசை நோக்கி நடந்தார் பெருமாள். அங்கே, பாவிகள் சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று ஏகாதசி திதி. இன்று ஏகாதசி ஆயிற்றே! என்று வாய்விட்டு சொன்னார். அந்த நிமிஷமே அவர்களின் பாவம் அனைத்தும் நீங்கிவிட்டது. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், ஏகாதசி விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குப் போய் வந்தால் எவ்வளவு புண்ணியம் சேரும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பாபாங்குச ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் புனித தலங்களில் வழிபட்ட பலன் கிடைக்கும். இந்த ஏகாதசி விரதம் மோற்கொண்டால் முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். இன்று ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்கிறது புராணம். வீட்டில் விளக்கேற்றி, துளசி சாற்றி மகாவிஷ்ணுவை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபட வேண்டும். இன்று விரதம் இருந்து பெருமாளை வழிபடுவோர்க்கு மட்டுமல்ல அவரது 10 தலைமுறைக்கும் மோட்சம் கிடைக்கும்!