ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர், பூதபுரீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு, காமதேனு வாகனத்தில் பூதபுரீஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீபெரும்புதூர் பூதபுரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், பங்குனி உத்திர பெருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 16ம் தேதி, காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று முதல் தினமும், காலை மற்றும் மாலை நேரங்களில், வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று காலை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் பூதபுரீஸ்வரர் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். வான வேடிக்கைகள், மங்கள வாத்திய இசை முழங்க வீதியுலா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இன்று பத்தாம் நாள் உற்சவமாக காலை தீர்த்தவாரி உற்சவமும், மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கின்றன.