பதிவு செய்த நாள்
17
ஏப்
2013
11:04
கம்பம்: சாட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன், கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. தேனி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாக்கள், வீரபாண்டி மற்றும் கம்பம் கவுமாரியம்மன் கோயில்களில் நடைபெறும். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். சுயம்புவாக தோன்றி அருள்பாலித்து வரும் கம்பம் கவுமாரியம்மன் கோயிலில், சமீபத்தில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவிற்கென ஊர் முக்கியஸ்தர்கள் கூடி, 48 நாட்கள் நடைபெற வேண்டிய மண்டல பூஜைகளை, ஒரு நாளைக்கு இரண்டு பூஜைகள் வீதம் 24 நாட்கள் நடத்தி, சித்திரை திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.அதன்படி நேற்று மாலை சாட்டுதல் மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊர் முழுவதும் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்குவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் ஜெயப்பாண்டியன், நாராயணன், சேகர் உள்ளிட்ட திருப்பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இன்று முதல் சமூகத்தாரின் மண்டகப்படி நடைபெறும். 22 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தவர்கள், அம்மனை அலங்கரித்து, பல்வேறு வாகனங்களில் வீதி உலா அழைத்து வருவர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்னிசட்டி எடுத்தல் நடைபெறும்.