பதிவு செய்த நாள்
07
ஜூலை
2015
06:07
உழைத்துப் பாடுபடும் மனிதர்களைக் கண்டால் தெய்வத்திற்கு மிகவும் பிடிக்கும் என்கிறது ரிக் வேதம். உழைக்கின்ற கைகளாலேயே உலகத்தை புதுமுறையில் மாற்ற முடியும். தியாக குணமும், பற்றின்மையும் உண்டாகி விட்டால், ஆன்மிகம் என்னும் மாளிகைக்குள் நுழைய தகுதி அடைந்ததாகப் பொருள். தியாகமே அந்த மாளிகையின் திறவுகோல்.கிடைத்ததைக் கொண்டு பகிர்ந்து வாழ்வதும், எல்லா உயிர்களையும் நேசிப்பதும் தலையாய தர்மம் என்கிறது உலகப் பொதுமறை திருக்குறள்.தர்மமும், ஆன்மிகமும் கலந்த சிந்தனையே மனிதனுக்கு சிறப்பளிக்கும். இவற்றிற்கு புறம்பான புத்தி சிரமத்தையே தரும். எல்லாத் தேவைக்கும் பிறர் உதவியை நாடுவது பலவீனம். தன்னம்பிக்கையுடன் தன்னை உயர்த்திக் கொள்வதே உண்மையான பலம்.
பொறுமைசாலிகளிடம் பொறாமை உணர்வு உண்டாவதில்லை. பித்தளையில் உண்டாகும் களிம்பு போல, மனதை பொறாமை கறைபடுத்துகிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்பர் பெரியோர். உடம்பில் உயிர் இருக்கும் வரை கடமை உணர்ச்சி இருக்குமானால் பூலோகமே சொர்க்கமாகும். மனிதன் தன் விதியைத் தானே உருவாக்குகிறான். உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவனவன் மனநிலையே காரணம்.தன்னை மட்டுமில்லாமல் தன்னோடு சேர்ந்தவர்களையும் அழிக்கும் தன்மை பேராசைக்கு உண்டு. ராவணன், துரியோதனன் போன்றோர் இதற்கு உதாரணம்.உணவைப் பொறுத்து மனிதனின் உடல்நிலையும், மனதின் இயல்பும் உருவாகிறது. உணவு சத்தாக இருப்பதோடு, நல்ல மனநிலையோடு சமைப்பது அவசியம்.விண்ணுக்கு வேலி இல்லாதது போல, ஞானிகளுக்கும் இனம், மொழி, நாடு என்ற பாகுபாடுகள் கிடையாது. கல்விக்கு அழகு பணிவு, அடக்கம் போன்ற நற்பண்புகளே. பணிவில்லாத கல்வி பயனற்றது. முற்றிய நெற்கதிர் போல பணிவுடன் இருக்கும் அறிஞர்களிடம் அகந்தை இருப்பதில்லை. அரிய செயலாற்ற விரும்பினால், மனம் ஒருமுகத்தன்மையுடன் இருக்க வேண்டும். மன இறுக்கம் தரும் விஷயங்களில் ஈடுபடுவது கூடாது. காலம் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது. காலத்தின் அருமை கருதி அதைப் பயன்படுத்தினால் வெற்றி பெறுவது உறுதி.