பதிவு செய்த நாள்
17
பிப்
2018
12:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: கோயில் தேர் என்றாலே தமிழர்களின் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சிற்பகலைக்கூடமாகும். அந்தளவிற்கு அதில் ஏராளமான சிற்பங்கள் மிகவும் உயிர்த்தன்மையுடன் வடிவமைத்து இருப்பார்கள். பல தெய்வ உருவங்களையும், பழந்தமிழ் மன்னர்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் சிற்பங்களாக வடிவமைத்து உள்ளனர். இவை பல நூறு ஆண்டுகள் ஆனாலும், எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் அரிய பொக்கிசமாகும்.
அத்தகைய தேர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரும் ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட இத்தேரில் இருக்கும் சிற்பங்களில் சில, இன்றும் ஏராளமான மக்களால் குலதெய்வமாக வணங்கபடுகிறது. அதிலும் மகாசிவராத்திரியன்று குலதெய்வ வழிபாடு என்பது இந்துக்களின் பரம்பரை, வழிபாடாகும். அன்றைய தினத்தில் உலகின் எப்பகுதியில் இருப்பவர்களும் தங்கள் முன்னோர்களின் குலதெய்வ கோயில்கள் எந்த கிராமத்தில் இருந்தாலும், குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரின் கீழ்பக்கம் சிற்பங்களாக இருக்கும் காளியம்மன், சங்கிலியாண்டி, பூதத்தான் தெய்வங்களுக்கு ராஜபாளையம், சத்திரபட்டி, புனல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, ஆண்டிபட்டி, சக்கம்பட்டி ஆகிய ஏழுர்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் வருகைதந்து, தேருக்கு முன் பொங்கல் வைத்து சுவாமி கும்பிடுவது பக்தியின் மாண்பை பறைசாற்றுகிறது.