பதிவு செய்த நாள்
15
மே
2018
12:05
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, மே 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சென்னை, வடபழனியில் அமைந்துள்ள, வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விழா, 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு, மங்கள கிரி விமான சேவை நடக்கிறது.இரண்டாம் நாள் விழாவில், சூரிய, சந்திர பிரபையும்; 3ம் நாள் விழாவில், ஆட்டுக்கிடா வாகனம்; 4ம் நாள் விழாவில், நாக வாகன சேவையும் நடக்கிறது. 5ம் நாள் விழாவில், பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது.விழாவின் பிரதான நாளான, மே 25ம் தேதி காலை, 7:10 மணிக்கு, திருத்தேர் திருவிழாவும், இரவு ஒய்யாளி உற்சவமும் நடக்கிறது. 9ம் நாள் விழாவில், வடபழனி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. வைகாசி விசாகமான, 10ம் நாள், வள்ளி - தேவசேனா சமேத, சண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று இரவு, 7:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், மயில்வாகன புறப்பாடும் நடக்கிறது.அதை தொடர்ந்து, மே 30ம் தேதி முதல், ஜூன் 8ம் தேதி வரை நடக்கும், விடையாற்றி உற்சவத்தில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.