தெப்பக்குளங்கள் இருக்கக்கூடிய கோவில்களைத் தரிசிப்பது மிக விசேஷம். மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தங்கத்தால் ஆன தாமரையே இருக்கிறது. வண்டியூர் மாரியம்மன் கோவில் முன்புள்ள தெப்பக்குளம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வருவதற்காக கி.பி.1635ல் வெட்டப்பட்டது. இது ஆயிரம் அடி நீளமும், 950 அடி அகலமும் கொண்டது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பக்குளம் 1158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டது.இதை நதியாக கருதுவதால் இதற்கு, ‘ஹரித்ரா நதி’ என்று பெயரிட்டுள்ளனர். கும்பகோணம் மகாமகக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. திரிவேணிசங்கமத்தையும் விட உயர்ந்தது. மைலாப்பூர் கபாலீஸ்வரர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், சிதம்பரம் நடராஜர், சீர்காழி தோணியப்பர், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவெண்காடு, திருவண்ணாமலை கோவில் தெப்பக்குளங்களும் அளவில் பெரியவை. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தெப்பக்குளத்தை ‘கமலாலயம்’ என்று அழைப்பர். இதன் பரப்பளவு 30 ஏக்கர்.