பதிவு செய்த நாள்
03
நவ
2018
04:11
மாசியின் மகத்துவம்
திலீபன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் கொடிய மிருகங்களை வேட்டையாடுவதில் வல்லவன். அதில் விருப்பன் கொண்டவனும் கூட எனச் சொல்லலாம்.
ஒருநாள் வேட்டையாட காட்டிற்குச் சென்றவன், கொடி மிருகங்களை நெடுநேரம் வேட்டையாடினான் அதன் பின் தன்னுடைய வீரர்களுடன் புறப்பட்டான். அப்போது விருந்திஹாரிதர் என்னும் முனிவர், ‘மன்னா! இன்று இங்கேயே தங்கி, நாளை போகலாமே! அதிகாலையில் நதியில் நீராடியபின் செல்லாமே!’ என்றார்.
அதற்கு மன்னனும் ‘இருக்கலாம் ’ என்றான். முனிவர் மேலும் கூறினார். ‘மன்னா! நாளைய நீராடலுக்குத் தனிச்சிறப்பு உண்டு. நாளை மாசிமாதம் பிறக்கிறது. மாசியில் எல்லா நீர்நிலைகளிலும் மகாவிஷ்ணுவின் திருவருள் மிகுதியாகத் தேங்கி நிற்கும். அது சமயம் அதிகாலையில் அவன் புகழ் எண்ணியபடி அன்றாடம் நீராடியவர்களுக்குப் புண்ணியங்களை அவன் அருளுவான்” என்றார்.
மன்னனும் அவர் சொன்ன சொல்லைக் கேட்டு அன்று இரவு தங்கினான். அதிகாலையில் எழுந்து நதியிலே நீராடினான். அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.
அரண்மனை திரும்பிய மன்னனும், தமது குலகுருவான வசிஷ்டரை, வரவழைத்தான். அவரிடம் தான் வேட்டை யாடச் சென்றதையும், சென்ற இடத்தில் விருந்திஹாரிதர், என்ற முனிவரை சந்தித்ததையும் அவர் மாசியில் நதி நீராடல் விசேஷம், என்று சொன்னதையும், அதைப்பற்றி விளக்கமாகச் சொல்லும்படியும் கேட்டான், தீலீபமன்னன்.
வசிஷ்ட முனிவரும், “தீலிப மன்னா! ஆம், மாசி நீராடல் மகாவிஷ்ணுவின் அருளை அளிக்கக்கூடியது தான், அதை வத்சனுடைய வாழ்க்கை சம்பவத்தால் அறியலாம் ”, என்று கூற ஆரம்பித்தார்.
“யமுனை நதி! அங்கு பல கானகங்கள் அடர்ந்து அழகாக இருக்கும். தவம் செய்யும் சிறந்த இடம்! அக்கானகங்களில் மதுவனம் எனும் கானகம், யமுனை நதியின் கரையில் உள்ளது. அங்கு வத்சன் என்னும் முனிகுமாரர் மாசி மாதத்தில் சூரியன் உதிக்கும்முன் அதிகாலைப்பொழுதில் மாதவனைத் துதித்தவண்ணம் அன்றாடம் தொடர்ந்து நீராடி வந்தார். தன்னை மறந்து தவத்தில் ஆழ்ந்தும் போவார். அந்த சமயம் காட்டு மிருகங்கள் எல்லாம் அவரருகில் செல்லும், அவர் மேல் சாய்ந்த வண்ணமும் இருக்கும். சில சமயம் உரசியும் பார்க்கும், சில மிருகங்கள் முட்டிப்பார்க்கும், சில மிருகங்கள் தங்கள் கொம்பைத் தீட்டியும் கொண்டதுண்டு. இத்தனைக்கும் கொஞ்சமும் மனம் தளராமல் சலனப்படாமல் தம் தவத்தைச் செய்து வந்தார்.
இதைக் கண்டவர்கள் அவரின் மனஉறுதியையும் தவத்தையும் அறிந்து அவருக்கு ‘மிருகசிருங்கர் ’ என்று பெயரிட்டனர். அதன்படியே அழைக்கவும் செய்தனர். இதுவே நாளடைவில் அவர் பெயராயிற்று தவவலிமையில் நிகரற்றவரானார்.
ஒரு சமயம் மிருகசிருங்கர் கானகத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். அதன் எல்லைக்கருகே வரும்போது புலம்பியபடியே அழுதுகொண்டு, கதறிய குரல் அவரை உலுக்கியது. என்னவென்று அறிய விரைந்து நடந்தார்.
அங்கு ஒரு பெண்மணி கிணற்றின்மேல் நின்றுகொண்டு ‘இந்தக் கொடுமையை என்னால் தாளமுடியாது இறைவா’ என்று கதறிக்கொண்டு கிணற்றிலே விழப்போனாள். உடனே மிருகசிருங்கர் ஓடியவண்ணம் ‘நில்லுங்கள்... விழாதீர்கள்’ என்று தடுத்து நிறுத்தினார். அதன்பின் அப்பெண்மணியைப் பார்த்து, “அம்மா! என்ன நடந்தது? ஏன் தாங்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறீர்கள்? விவரமாகக் கூறுங்கள் ” என்றார்.
கிணற்றில் விழ இருந்த பெண்மணி முனிவர் பெருமானே! என் அருமைப் பெண்கள் மூன்று பேருமே இந்தப் பாழுங்கிணற்றில் இடறி விழுந்து இறந்து போனார்கள். அவர்கள் இல்லாமல் நான் மட்டும் இருந்து என்ன செய்யப் போகிறேன். இத்துயரத்தை எப்படித் தாங்கிக்கொள்வேன். என்னால் தாங்கிக்கொள்ள முடியாததால் என் உயிரையும் எடுத்துக்கொள்ளும்படி கடவுளிடம் முறையிட்டேன். கிணற்றில் விழுவிருந்த என்னை ஏன் தடுத்து நிறுத்தினீர்கள். தயவு செய்து என்னையும் சாக விடுங்கள், நான் என் உயிரை விடத்தான் போகிறேன் ” என்றாள். உடனே முனிவர், “வேண்டாம் அம்மணி! உங்களுடைய பெண்கள் உயிர் பெற நான் கடவுளின் அருளை வேண்டுகிறேன். அப்படி இல்லை என்றால் உங்கள் உயிரை விட்டு விடலாம் ” என்றார்.
உடனே முனிவர் நதியில் இறங்கினார். கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு கடுந்தவம் இயற்றினார். அப்போது வானத்திலிருந்து ஓர் இடிக்குரல் ஒலித்தது. ‘வத்ஸா.... உன் கோரிக்கை, முறையல்ல ’ என்றது குரலுக்குடையவர் காட்சியளித்தார். உயிர்களைப் பறிக்கும், மரணதேவனான எமதர்மராஜன் தான், அவர் மேலும் கூறினார். “மாண்டவர் உயிரை மீண்டும் தருவதில்லை, வழக்கமில்லை என்று உனக்குத் தெரியாதா?” என்றார். அதற்கு முனிவரும், “ஐயனே! அந்தத்தாயைப் பாருங்கள். அவள் தன் மூன்று பெண்களையும் பறிகொடுத்து விட்டு துயர்படுவதைப் பாருங்கள். அந்தத் தாயின் துயரத்தைத் துடைக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அதுவே என்னுள் நிறைந்து நிற்பதால் தவம் இயற்றுகிறேன். பெண்கள் இவ்வுலகத்தின் கண்கள் என்பது தாங்கள் அறியாததா? அவர்களை அற்ப ஆயுளில் பறிக்கலாமா? இதுவே நான் வேண்டுவதாகும்” என்றார்.
எமதர்மராஜனும், “வத்சா! நீ சொல்லுவது நன்றாகத்தான் இருக்கிறது. நியாயமும் கூடத்தான். ஆனால், அவரவர் கர்மாவின்படிதான் அகாலமரணம் ஏற்படுகிறது. இவர்களின் கர்மாக்களினால் இவர்களது விதி முடிந்துவிட்டது. அப்படியிருக்க, நீ ஏன் உன்னை வருத்திக் கொள்கிறாய் ” என்றான்.
அதற்கு முனிவர், “தர்மராஜனே! அப்படியானால் அவர்களின் கொடிய கர்மாக்கள் விலக என்னுடைய புண்ணியபலத்தால் அகற்றுகிறேன். நான் மாசி மாதங்களில் நதி தீரத்தில் அதிகாலையில் தூய நீராடலானமாக ஸ்நானம் செய்ததால் உண்டான புண்ணியங்கள் அனைத்தையும் இந்த மாதாவின் பெண்களுக்கே அர்ப்பணிக்கிறேன். இவர்களுக்கு உயிர் தாருங்கள்” என்றார்.
உடனே எமதர்மராஜன் “வத்சா! நினைத்ததை சாதித்துக் கொண்டாய்! உன் ‘மாக ஸ்நான ’ பலனைக் கொடுத்ததில் அவர்கள் பாபம் ஒழிந்தது. மறுபடியும் உயிர்பெற்று வாழ்வார்கள். உன் விருப்பப்படியே அருள்கிறேன்” என்றார்.
முனிவரின் தபோ வலிமையால் தன் மாகஸ்நான பலனை அப்பெண்களுக்கு அர்ப்பணித்து யமனிடமிருந்து அவர்களுக்கு உயிர்பெற்றுத்தந்ததில் அம்மூன்று பெண்களும் உயிர்பெற்று எழுந்தனர்.
அப்பெண்கள் உயிர்பெற்று எழுந்ததைக் கண்ட அத்தாயார், முனிவரின் கால்களில் விழுந்து, ஆனந்த கண்ணீர் விட்டாள். அவள் அடைந்த, மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். முனிவரை வணங்கி, “முனிவர் பெருமானே! என் பெண்களுக்கு உயிரை மீட்டுக் கொடுத்த தங்களை என்றும் மறக்கமாட்டேன்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள்.
முனிவரும், “அம்மணியே! உயிர்தந்தது நானல்ல, மாசி மாத மாக ஸ்நானத்தின் புண்ணியமே ” என்று கூறினார்.
இவ்வாறு திலீப மன்னனுக்கு மாசி நீராடலைப்பற்றிப் கூறினார். வசிஷ்ட முனிவர். மேலும் மாசிக்கு ஒரு மகத்துவம் உண்டு என்று திலீப மன்னனிடம் கூறலானார். உயிர்கள் பிறக்கின்றன. இது போலவே இறக்கின்றன. இதுபோலவே உலகம் தோன்றுவதும், ஜீவராசிகள் பிறப்பதும், ஒருநாள் எல்லாம் அழிவது என்பது உலகநாயகனான சிவ பெருமானின் திருவிளையாடல் ஆகும். அவ்விதமே பிரளய வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. நிலம், நீர் நிலைகள், மலைகள், ஜீவராசிகள், உயிரினங்கள் அனைத்தும் உள்ளிட்ட பிரபஞ்சமே பிரளய வெள்ளத்தால் மூழ்கியது.
சகல ஜீவகோடிகளின் தாயாகவும், பிரபஞ்சத்தின் சக்தியாகவும் இயங்கிவரும் அன்னை, எல்லாம் தானாகவும், தானே எல்லாமாகவும் ஆன, பராசக்தியின் தாயுள்ளம் இதைக்கண்டு பதறியது...!
பிரம்மா முதல் தேவர்கள் யாவருடைய இயக்கமும் ஸ்தம்பித்து விட்டதே...! மனிதர்களின் வாழ்வும் அழிந்து விட்டதே, இந்நிலைக்கூடாது. இந்த உலகம் மீண்டும் தோன்றவேண்டும். புல், பூண்டு, தாவரங்கள் முதல் அனைத்து ஜீவராசிகளும் தோன்ற வழி செய்ய வேண்டும். மனிதர்கள் தோன்றினால் அன்றோ தேவர்களின் வாழ்வுக்கு ஆதாரமான, யக்ஞம் யாகம் போன்றவைகள் தடையின்றி நடக்க வழியாகும். அதனால் உலகம் தோன்ற வழி செய்ய வேண்டும்’ என்று முடிவெடுத்த அன்னை பராசக்தியானவள், சிவபெருமானை பூஜித்து வழிபட நினைத்தார்...!
ஒரு மாசி மாதத்தில் அமாவாசை தினத்திற்கு முதல்நாள் சதுர்தசி அன்று அதிகாலை முதல் பரமசிவனை அதிதீவிரமாக அபிஷேக ஆராதனைகளுடன் பூஜித்து அன்னை ஆகாரங்களை விடுத்து, உபவாசம் ஏற்று, இரவில் நான்கு ஜாமங்களிலும் வேத நியமப்பிரகாரம் பூஜித்து, ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய!!! என்று ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த வண்ணம் இருக்க, பிரபஞ்சத்தின் பேரிருளில் பராசக்தியின் குரல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. இப்படியாக உலகம் உயிர்பெறவேண்டினார் பார்வதி தேவியார்.
அதிகாலையில், இறைவன் திருவுள்ளம் கொண்டு ஜல சமுத்திரத்திலிருந்து பூமியை உயிர் பெறச் செய்தார். ஊழிவெள்ளம் வடிய வடிய மெள்ள பூமி (உலகம்) வெளிப்பட்டது. கதிரொளி பூமியைத் தழுவியது. உயிர்கள் தோன்றின. உலக இயக்கங்கள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறத் தொடங்கின என்று கூறினார்.
எல்லா விவரங்களையும் கேட்டறிந்த திலீப மன்னன் மாசிமாதத்துக்கும், மாசி நீராடலுக்கும் இத்தனை பெருமைகளா? என்று வியந்தான். அன்று முதல் நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லி, நடைமுறையாக்கினான் என்று புராணம் மூலம் அறியலாம் என்று பெரியோர்கள் கூறக்கேட்கலாம்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் (மாசி மகம்) ஸ்நானத்தைப்பற்றி அறிவோமா!
மாசி மாத பவுர்ணமி அன்று சிம்மத்தில் சந்திரனும், குருவும் இணைந்திருக்க, கும்ப ராசியில் சூரியன் இவ்விருவரின் பார்வை பெற்று, தான் அவர்களை நோக்குகையில் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று கும்பகோணத்திலுள்ள மாமாங்கப் பொய்கையில் எல்லா உலகங்களிலுமுள்ள பிரம்மாதி தேவர்கள் அங்கு நீராட வருகின்றனர்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயூ, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மஹாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை நமஸ்கரித்து ஜனங்கள் எங்களிடம் விடும் பாபத்தை நாங்கள் எப்படித் தொலைப்போம் எனக் கேட்டனர்.
பரமசிவன் “நதி மங்கையரே! மகாமகத்தன்று குடந்தையிலுள்ள ‘பாபாநோதகம் ’ என்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள். ஒரு மாமாங்கம் வரை செய்த பாபங்கள் நசித்து விடும்” என்றார்.
“குடந்தை எங்கிருக்கிறது?” என்று நதிப் பெண்கள் கேட்க, உமா மகேஸ்வரர் “என் பின்னால் வாருங்கள்” என்றபடி புறப்பட்டு கும்பகோணம் வந்தார். அவருடன் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் கூட வந்தனர்.
இப்புண்ணிய தினத்தில் குடந்தையிலுள்ள கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், விச்வேஸ்வரர், அபிமுகேஸ்வரர், ஸோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், காளேஸ்வரர், கோடீஸ்வரர், பாணேஸ்வரர் முதலிய தெய்வங்கள் தங்கள் வாகனங்களில் ஏறி வந்து தீர்த்தம் கொடுக்கின்றனர். பிரம்மஹத்தி முதலான பாபங்களைப் போக்கும் தீர்த்தம், மூன்று லோகங்களிலும் இது போன்று இல்லை என்று பவிஷ்யோத்தர புராணம் சொல்கிறது. அகம் என்றால் பாபம். மா என்றால் தொடாது. இதில் நீராடியவர்களைப் பாபம் தீண்டாது என்பதால் இதற்கு மக தீர்த்தம் என்று பெயர் வந்தது.
அன்று குளத்தை வலம் வந்தாலோ, நமஸ்கரித்தாலோ நூறு பங்கு செய்யப்பட்டதாக சித்திரகுப்தன் கணக்கெழுதிக் கொள்கிறான். நீராடினால் நூறு ஆண்டுகள் கங்கையில் ஸ்நானம் செய்ததாகக் கணக்கு. அதுவும் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம்!
இந்தப் பொய்கைக்கு வடக்கேயுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் 101 தலைமுறைக்கு மோட்சம் கிடைக்கிறது. மற்ற நாட்களில் குளித்தால் ஏழு தடவை ஸ்நானம் செய்த பலன். மறு பிறவியில் ஞானம், கல்வி, செல்வம், வெற்றி, புகழ், தீர்க்காயுள், தைரியம், சந்ததி எல்லாம் கிடைக்கும்’ என்று நான்முகன் நாரதருக்கு சொல்லியிருக்கிறார்.
கிழக்கே உள்ள குபேர தீர்த்தத்தில் நீராடி தான தருமங்கள் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். குபேர தீர்த்தத்திற்குக் கிழக்கே, இந்திர தீர்த்தத்திற்கு வடக்கே உள்ள ஈசான தீர்த்தத்தில் நீராடினால் சகல பாபங்களும் நிர்மூலமாகி கோரிய பலன்கள் கிட்டும் என்பது நிச்சயம்.
மஹாமகக் குளத்தின் நடுவே உள்ளது கன்யா தீர்த்தம், இதில் 66 கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன. இதில் நீராடுபவர்களுக்கு பிரம்மாண்டத்திலுள்ள எல்லா தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும்.
பிரம்ம தீர்த்தத்திற்கும், வாயு தீர்த்தத்திற்கும் நடுவில் இருப்பது பாகீரதி தீர்த்தம். இங்கு கங்கை நித்ய வாசம் செய்கிறாள். இதில் மகாமகத்தன்று நீராடினால் விரும்பிய படி கைலாசமோ, வைகுண்டமோ கிடைக்கும். அதோடு காசியில் வாசம் செய்து கங்கையில் பத்தாயிரம் தடவை நீராடிய புண்ணியமும் கிடைக்கும்.
ரிஷப லக்னத்தில் ஸ்நானம் செய்பவர்கள் பல குமிழிகள் உண்டாவதைப் பார்க்கலாம்.
ஒவ்வொரு தீர்த்தத்திலும் தனித்தனியாக சங்கல்பம் செய்து ஸ்நானம் பண்ண வேண்டும். ஒரு பசுவின் விலையை சாஸ்திரிகளுக்குத் தருவது விசேஷம், பசுவையே கூட தானம் கொடுக்கலாம். இதற்குக் கோடி கோதான பலன் கிடைக்கும்.
வாயு தீர்த்தம், மகாமகக் குளத்துக்கு வடமேற்கு திக்கில் இருக்கிறது. அதிலிருந்து பிரதட்சணமாக வந்தால் பாகீரதி தீர்த்தத்தைக் கடந்து பிரம்ம, யமுனா, குபேர, கோதாவரி, ஈசான, நர்மதா, இந்திர, சரஸ்வதி, அக்னி, காவேரி, யம, குமரி, நிருருதி பயோஷ்ணீ (பாலாறு), தேவ,வருண, சரயூ, கன்யா தீர்த்தங்களைக் காணலாம். இதற்கு நடுவில்தான் 66 கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன.
குடம் உடைந்து அமிர்தம் பெருகியதால் ‘ஸுதா தீர்த்தம் ’ என்ற பெயரும், நதி தேவதைகள் நீராடியதால் கன்யா தீர்த்தம் என்றும், பிரம்மா அவபிருத ஸ்நானம் செய்ததால், பிரம்ம தீர்த்தம் என்றும், பாபங்களைப் போக்குவதால் ‘பாபாபநோதகம் ’ என்றும் பெயர்கள் வந்தததாக புராணம் சொல்கின்றது.
இந்தப் பொய்கையில் நீராடுமுன் காவேரியில் குளிக்க வேண்டும். அதை முதல் நாளே கூட செய்யலாம். முடியாதவர்கள் பஞ்ச கவ்யம் சேர்த்து தெளித்துக் கொள்ளலாம்.
மஹாமகத்துக்கு ஒரு வருடம் முன்னாலேயே 66 கோடி தீர்த்தங்களும் குடந்தைக்கு வந்து விடுவதாக புராணம் கூறுகிறது. அதனால் விவாகங்கள் செய்யப்படுவதில்லை! எல்லா தேவர்களும் குடந்தைக்கு வந்து விடுவதால் வேறு தேசங்களுக்கு மகிமை இல்லை! விந்திய மலைக்குத் தெற்கே உள்ளவர்கள் திருமணம் நடத்தலாம் ’ என்று வியாச ஸ்ம்ருதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒன்பது கன்னிகைகளுக்கு தாம்பூலம், பழம், தட்சணை, தேங்காய், குங்குமம் ரவிக்கைத் துணி கொடுப்பது விசேஷம் என்று கர்கஸ்ம்ருதி சொல்கிறது.
மஹாமகக் குளத்தில் நீராடி எழுந்ததும் ஒன்பது முறங்களில் பலவிதமான பழங்களையும் (முக்கியமாக மாதுளம் பழம்) வஸ்திரம், தாம்பூலம் வைத்து வேதியர்களுக்குத் தானம் செய்ய வேண்டும்.
சுமங்கலிகளுக்குக் கொடுப்பதனால் மங்கலப் பொருட்களை முறத்தில் வைத்து இன்னொரு முறத்தால் மூடிக் கொடுக்க வேண்டும். தானங்களை தீர்த்தக் கரையிலோ, அரசமரத்தடியிலோ, கோவில்களிலோ, இல்லங்களிலோ கூடச் செய்யலாம்.
1. பூதானம், 2. கன்னிகாதானம் (பெண் குழந்தை இல்லாதவர் ஒரு பெண்ணின் திருமணத்துக்கு உதவியாக பணத்தைக் கொடுக்கலாம்.) 3. சொர்ண தானம், 4. யக்ஞோபவீத தானம், 4. கோதானம், 6. அஸ்வ தானம், 7. வ்ருஷப தானம், (மரணாவஸ்தை ஏற்படாது), 8. அன்னதானம், 9. பாயஸதானம், 10. தான்ய தானம், 11. கல்பக விருட்ச தானம் (தேங்காய்), 12. குப்ததானம், (பூசணிக்காய் அல்லது பலாப்பழம் அல்லது இளநீர் இவைகளில் ஒரு ரூபாய் அகலத்துக்குக் குடைந்து அதற்குள் நவரத்தினங்கள், வெள்ளி, தங்கம் இவைகளைப் போட்டு எடுத்து தோலினால் மூடி தட்சணையுடன் கொடுப்பது), 13 சந்தன தானம், 14. நல்முத்து தானம், 15. நவரத்ன தானம், 16. தேன்தானம், 17. உப்பு தானம், 18. எள் தானம், 19. மாதுளம் பழ தானம், 20. ஷோடச பல தானம் (16 விதமான பழங்களை வைத்து 16 நபர்களுக்குத் தானம் செய்வது)
இந்த இருபது தானங்களையும் அவரவர் சக்திக்கு உட்பட்டு செய்யலாம். ஸத்புத்ரனை விரும்புகிறவர்கள் செய்ய வேண்டிய தானங்களாவன 1. தென்னை மரம், 12. பதினோரு எள்ளுருண்டை, 3. ஐம்பது பலம் எடையுள்ள வெண்ணெய்க்குள் நவரத்தினங்களை வைத்து லிங்கம் போல் செய்து வேதியர்களுக்கு அரசமரத் தடியில் தானம் செய்து, பிறகு தானம் கொடுத்தவர்களுக்கு அன்னமிட வேண்டும், இதைச் சாண்டில்ய முனிவர் உபதேசித்திருக்கிறார்.
சாரங்கபாணி, சக்ரபாணி, நாகேஸ்வரர் ஆகியோரையும் தரிசித்து அர்ச்சனை செய்து அன்னதானம் செய்ய வேண்டும் என்று மத்ஸ்ய ஸ்ம்ருதி கூறுகிறது. க்ஷவரம் செய்து கொண்டு நீராடி சிரார்த்தம் கொடுத்தால் பித்ருக்கள் வாழ்த்துவார்கள். முதல் நாளோ, முதல் வாரமோ கூட இதைச் செய்யலாம். தீர்த்த சிரார்த்தமும் கொடுக்கலாம்.
மகாமகத்துக்குப் போக முடியாதவர்கள் மகாமகம் இருக்கும் திசையை நோக்கி நமஸ்கரித்து, நீராடி தானங்களை செய்யலாம்.
ஸர்வக்ஷேத்ர க்ருதம் பாம் காசீ ’க்ஷேத்ரே வினச்’யதி
வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநஸ்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநஸ்யதி
காசியில் செய்யும் பாபங்கள் மகாமகக்குளத்தில் ஸ்நானம் செய்து தானம் செய்வதால் கழிகிறது. கும்பகோணத்தில் செய்யும் பாபம் கும்பகோணத்திலேயே (மகாமக நீராடுவதால்) கழிகிறது. மகா மாதத்தில் மகாமகக் குளத்தில் நீராடி தர்ப்பணம் செய்தால் பதினாயிரம் முறை கயா சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும். கன்யா தீர்த்தத்தில் நீராடி எள் தர்ப்பணம் செய்தால் 108 தலைமுறையினருக்கு நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கும். மகாமகக் குளக்கரையில் காளை மாட்டைத் தானம் கொடுத்தால் கோடி கயா சிரார்த்தம் நடத்திய புண்ணிய கிடைக்கும்.
மகாமகக் குளத்தைச் சுற்றி ஷோடச (16) மஹாலிங்க ஸ்வாமி கோயில்கள் உள்ளன. மிகவும் புனிதமான மகாமகத் திருக்குளம் தேவதச்சனால் அமைக்கப்பட்டது. இக்குளத்தைச் சுற்றியுள்ள 16 கோயில்களும், தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்க மன்னரின் ஆதரவுடன் கி.பி. 1542ல், அம்மன்னரிடம் மந்திரியாக இருந்த கோவிந்த தீக்ஷிதரால் கட்டப்பட்டது. 16 கோயில்களிலும் உள்ள ஸ்வாமிகள் “ஷோடச மாஹலிங்க ஸ்வாமிகள்” எனப்படும். அவர்கள் பெயர்கள் வருமாறு: 1.) பிரம்ம தீர்த்தேச்வரர், 2.) இந்ததேசுவரர், 3.) தனேசுவரர், 4.)ரிஷபேசுவரர், 5.)பாணேசுவரர், 6.) கோணேசுவரர், 7.) பக்திகேசுவரர், 8. வைரவேசுவரர், 9.)அகத்தீசுவரர், 10.) வியாச ஈசுவரர், 11.) உமைபாகேசுவரர், 12.) நைனிதேசுவரர், 13.) பரமேசுவரர், 14.) கங்கேசுவரர், 15.)முக்த தீர்த்தேசுவரர், 16.) க்ஷேத்திர பலேசுவரர்.