சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் பரவசம்

ஜனவரி 14,2023



சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மாலை மகரஜோதி ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சபரிமலையின் முக்கிய விழாவான மகர ஜோதி விழா இன்று நடைபெற்றது. மூலவர் விக்ரகத்தில் அணிவிக்க திருவாபரணம் நேற்று முன்தினம் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது. இன்று மாலை இது சரங்குத்தி வந்தடைந்தது. மாலை 6:35 மணிக்கு சன்னதிக்கு வரும் திருவாபரண பெட்டியை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி வாங்கி மூலவருக்கு அணிவித்து தீபாராதனை நடத்தினர். அடுத்த சில விநாடிகளில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி ஏற்றப்பட்டது.

மகர சங்கரம பூஜை: நேற்று மாலை பம்பையில் பம்பை விருந்து படைத்து பக்தர்கள் வழிபட்டனர். மாலையில் பம்பை விளக்கு நடைபெற்றது. மூங்கிலில் தேர் கட்டி அதில் விளக்குகள் ஏற்றி பம்பை ஆற்றில் மிதக்க விட்டனர். இன்று நடக்கும் மற்றொரு முக்கிய நிகழ்வு மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் வேளையில் நடைபெறும் இந்த பூஜை, இன்று இரவு 8:45 மணிக்கு நடக்கிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கன்னி ஐயப்பன் மூலம் கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

 பாதுகாப்பு: ஜோதி தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் சன்னிதானத்தின் சுற்றுப்புறங்களில் கூடினர். பெரியாறு, வண்டிப்பாதை உள்ளிட்ட இடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மகர ஜோதி முன்னிட்டு எஸ்.பி.க்கள் பிஜூமோன் சன்னிதானத்திலும், ஆர். ஆனந்த் பாண்டித்தாவளத்திலும், கே.இ. பைஜூ,திருவாபரண தரிசனத்துக்கு பக்தர்கள் முண்டியடிக்கும் கோயில் வடக்கு வாசலிலும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். 21 டி.எஸ்.பி., 36 இன்ஸ்பெக்டர், 180 எஸ்.ஐ. உட்பட 1765 போலீசார் சன்னிதானத்தில் இருந்தனர். பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க சபரிமலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான ஏ.டி.ஜி.பி., எம்.ஆர். அஜித்குமார் சன்னிதானத்தில் முகாமிட்டிருந்தார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்