அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
அன்னூர் அருகே மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும் பழமையான மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேர் திருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 29ம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 30ம் தேதி இரவு அனுமந்த வாகனத்திலும், 31ம் தேதி இரவு கருட வாகனத்திலும், பெருமாள் திருவீதி உலா அருள் பாலித்தார். பிப். 1ம் தேதி காலை அம்மன் அழைத்தலும், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கடேச பெருமாளின் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் இரவு புஷ்பக வாகனத்திலும், நேற்று யானை வாகனத்திலும், திருவீதி உலா நடந்தது. இன்று காலை 5:30 மணிக்கு, பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. .இதற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.