தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி, நாள்தோறும் காலையும், மாலையும் வேள்வி பூஜை, அபிஷேகம், சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை, 8:00 மணிக்கு, நடராஜர் அபிஷேகம், தரிசன காட்சி நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா என்ற கோஷத்துடன், பக்தர்கள் புடைசூழ திருத்தேரை வடம் பிடித்து, கோவிலை சுற்றி வந்து மீண்டும் நிலையில் நிறுத்தப்பட்டது. அதன்பின் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடி மரத்திலிருந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.