கருமத்தம்பட்டி: கிட்டாம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 21 ம்தேதி மாலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மறுநாள் இரு கால ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று, 108 திரவிய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை முடிந்து, 8:00 மணிக்கு ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அச்சம் பாளையம் சண்முகம் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், ஆசிரியர் கனகராஜ் தலைமையிலான சங்கமம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம், வேலவன் காவடி குழுவினரின் காவடியாட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.