திருவாரூர்; 27வது திவ்ய தேசமான பழமையான பக்தவத்சல பெருமாள் கோவிலில் வான வேடிக்கையுடன் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றாக வைகுண்ட ஏகாதசி விழா. திருவாரூர் மாவட்டம் திருக்கண்ண மங்கையில் உள்ள 108 திவ்ய தேசத்தில் 27வது திவ்ய தேசமான பழமையான பக்தவத்சல பெருமாள் கோவிலில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதி காலை நடைபெற்றது. இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக பக்தவத்சல பெருமாள் அலங்காரத்துடன் திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சரியாக அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.தொடர்ந்து பக்தவத்சல பெருமாள் “பரமபத வாசல்”என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா” என பக்தி பரவசத்துடன் முழக்கங்கள் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். இதனையடுத்து சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள் கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார்.ஏராளமான பக்தர்கள் பக்தவச்சல பொருமாளை அபிஷேக வள்ளி தாயாரை வழிபட்டனர்.