அவிநாசி; சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில்,வரும் 30ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையை சுற்றிலும் முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேவூரில், 1300 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்ததாக போற்றப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக மராமத்து திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. கிபி 12-ம் நூற்றாண்டுக்கு முன்பு,கொங்குச் சோழர்களால் இக்கோவில் கட்டுமானம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றது. இச்சிறப்பு மிக்க வைணவதலமாக விளங்கும் அழகு ராய விண்ணகரம் என அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் வரும் 30ம் தேதி மகா கும்பாபிஷேக விழா காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடைபெறுகிறது.
முன்னதாக வரும் 26ம் தேதி கிராம சாந்தி, 27ம் தேதி ஸ்ரீ விஸ்வக்ஸேனர் ஆராதனம்,ஸ்ரீ சுதர்சன ஹோமம், விமான கலசம் வைத்தல், கொடிமரம் வைத்தல்,28ம் தேதி வாஸ்து ஹோமம், ம்ருத்சங்கிரஹனம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், தீர்த்த குட ஊர்வலம் ஆகியவற்றுடன் முதல் கால யாக பூஜைகள் தொடங்குகின்றது. பின்னர் 29ம் தேதி கோ பூஜை, மூலவருக்கு ஸ்தாபன திருமஞ்சனம், மகாலட்சுமி,சர்வகாயத்ரி ஆகிய ஹோமங்கள், வேதபாராயணம், மூலவர்,கருடாழ்வார் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகசாலை வேள்விகள் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெறுகிறது. வரும் 30ம் தேதி அதிகாலை நாடி சந்தனம், புண்யாவாசனம்,மகா பூர்ணாஹீதி ஆகியவை நான்காம் கால யாக பூஜைகளில் நடைபெற்று யாத்ராதானம்,கடம் புறப்பாடு ஆகியவையுடன் காலை 7:45 மணிக்கு விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம்,அதனைத் தொடர்ந்து 8.25மணிக்கு மூலஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன்,சேவூர் ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக தினத்தன்று திருப்பணி குழுவினர் மற்றும் சேவூர் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை திருக்கல்யாண உற்சவம், ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்காக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சியில் திருப்பணி உபயதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.