டிசம்பர் 15,2025
சபரிமலை: சபரிமலையில் மண்டல காலம் தொடங்கி நேற்று முன்தினம் வரை 24 லட்சம் பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளனர். பெருவழிப்பாதை உள்ளிட்ட காட்டுப்பாதைகளில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சபரிமலையில் இந்தாண்டுக்கான மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ., 16 ல் திறக்கப்பட்டது. நவ., 17- அதிகாலை முதல் மண்டல கால பூஜை துவங்கியது. அன்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த சீசனில் வித்தியாசமாக சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைந்தது. மற்ற நாட்களில் அதிகமான கூட்டம் காணப்படுகிறது. அரவணை விற்பனையிலும் பலமடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை வரை 24 லட்சம் பக்தர்கள் சன்னிதானத்தில் தரிசனம் நடத்தியுள்ளனர். காட்டுப்பாதைகளில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 338 பக்தர்கள் வந்துள்ளனர். இதில் எருமேலி, அழுதை பாதையில் 37 ஆயிரத்து 59 பேர் பேர் வந்துள்ளனர். தினமும் சராசரியாக 1500 முதல் 2500 பக்தர்கள் வரை இந்த பாதையில் வருகின்றனர். சத்திரம் புல்மேடு வழியாக 64 ஆயிரத்து 776 பக்தர்கள் வந்துள்ளனர். சராசரியாக தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பக்தர்கள் இந்த பாதையில் வருகின்றனர். வரும் நாட்களில் இந்த பாதைகளில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்னிதானத்தில் சராசரியாக தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் நடத்துகின்றனர். டிச., 8-ல் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 844 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். நவ., 24 ல் ஒரு லட்சத்து 868 பக்தர்கள் தரிசனம் நடத்தியதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.