டிசம்பர் 16,2025
சபரிமலை: சபரிமலையில் பாதைகளில் டிராக்டர்கள் ஓடுவதை கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து பொருட்களை கொண்டு செல்வதற்கு டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. மண்டல மகர விளக்கு சீசனில் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் டிராக்டர்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் இவர்களது வேகம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் பக்தர்கள் கூட்டத்துக்குள் டிராக்டர் புகுந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து டிராக்டர்களுக்கு கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து 10 கி.மீ., வேகத்தில்தான் டிராக்டர் ஓட்டிச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கண்கண்காணிக்க போலீஸ் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் டிராக்டர்களின் வேகத்தை கண்காணித்து, வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அபராதம் விதித்தல், லைசென்ஸ் ரத்து போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர். சன்னிதானத்திலும், பம்பையிலும் 50 தனியார், ஏழு தேவசம் போர்டு, ஆறு சானிட்டேஷன் சொசைட்டி டிராக்டர்கள் உள்ளன.