டிசம்பர் 18,2025
சபரிமலை: சபரிமலை நடப்பு மண்டல காலத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக நான்காம் கட்டமாக 1,600 போலீசார் நேற்று பொறுப்பேற்றனர்.
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த நவ., 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நவ.17- முதல் மண்டல காலம் தொடங்கியது. இங்கு போலீசாரின் பாதுகாப்பு பணி ஆறு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட போலீசார் பணி நிறைவடைந்து நேற்று நான்காம் கட்டமாக 1,600 போலீசார் பொறுப்பேற்றனர். ஒவ்வொரு கட்டங்களிலும் போலீசார் 10 நாட்கள் இங்கு தங்கி பணியாற்றுகின்றனர். கொடிமரம், சோபனம், மாளிகைபுறம், 18-ம் படி கீழ்ப்பகுதி, நடைப்பந்தல், யூ வளைவு, சரங்குத்தி, கியூ காம்ப்ளக்ஸ், மரக்கூட்டம், பாண்டித்தாவளம், கட்டுப்பாட்டு அறை என 11 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு டிவிஷனுக்கும் ஒரு டி.எஸ்.பி., பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பொறுப்பேற்ற போலீசார் டிச., 28ஆம் தேதி வரை பணியில் இருப்பர். சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரியாக எஸ்.பி. பாலகிருஷ்ண நாயர் பொறுப்பேற்றுள்ளார். மண்டலகாலம் தொடங்கி கார்த்திகை மாதத்தில் மட்டும் 26 லட்சத்து81 ஆயிரத்து 460 பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில் 25 லட்சத்து 60 ஆயிரத்து 297 பேர் நிலக்கல் பம்பை வழியாக சன்னிதானம் வந்துள்ளனர்.