டிசம்பர் 18,2025
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் காணாமல் போன விவகாரத்தில், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 2019ல் புனரமைப்பு பணிகள் நடந்தன. கருவறை முன்பாக இருந்த துவாரபாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும் போது, துவாரபாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. கருவறை கதவுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இது குறித்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், புனரமைப்பு பணிகள் மேற்கொண்ட முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார் உட்பட ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமாரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. முன்னதாக, இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ஸ்ரீகுமார் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் செயலர் ஜெயஸ்ரீ ஆகியோர் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து விரைவில் ஜெயஸ்ரீ கைதாவார் என எதிர்பார்க்கபடுகிறது.