டிசம்பர் 19,2025
சபரிமலை: வண்டிப்பெரியாறு - – சத்திரம் –- புல்மேடு வழியாக அதிக அளவில் பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேரள உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வண்டிப்பெரியாறு –சத்திரம் –-புல் மேடு பாதையில் இந்த நடப்பு சீசனில் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு கிடைக்காத தமிழக, கேரள பக்தர்கள் இந்த பாதையில் அதிகமாக வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த புல் மேடு விபத்தை சுட்டிக்காட்டி பக்தர்கள் அதிகம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் நியமித்துள்ள ஸ்பெஷல் கமிஷனர் ஆர். ஜெயகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பக்தர்கள் அதிகமாக வரும்போது அவர்களை சன்னிதானத்திற்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் போலீசுக்கு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது மதியம் 12.00 மணி வரை மட்டுமே சத்திரத்தில் இருந்து பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இது பற்றி திரு விதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே. ஜெயக்குமாரிடம் கேட்ட போது, நிலக்கல் –- பம்பை பாதையில் ஸ்பாட் புக்கிங் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் காட்டுப்பாதைகளை தேர்வு செய்வதாகவும் இதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த காட்டுப் பாதைகள் வழியாக நடப்பு சீசனில் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வந்துள்ளதாகவும், காட்டுப்பாதையில் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.