காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இரு ஆண்டுகளுக்கு பின், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகின்றன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா 14 நாட்கள் நடந்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு, 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வந்ததால், இரு ஆண்டுகளாக பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, நடப்பு ஆண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா வரும் 22ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.இதில், ஆறாம் நாள் உத்சவமான வரும் 27ம் தேதி காலை 63 நாயன்மார்கள் உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான வரும் 28ம் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது.இதில், 10ம் நாளான மார்ச் 31ம் தேதி இரவு, பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடக்கிறது.ஏப்., 4ம் தேதி இரவு, பொன் விமானத்தில் திருமுறை உத்சவத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நிறைவு பெறுகிறது.