காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான இன்று கருடசேவை உத்சவம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் வீதியுலா வந்தார். இரண்டாம் நாளான நேற்று காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் சுவாமி உலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான இன்று காலை, கருடசேவை உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் வீதியுலா வந்தார். இதில், ஏழாம் நாள் உத்சவமான தேரோட்டம் வரும் 18ம் தேதி காலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது. 20ம் தேதி காலை தீர்த்தவாரியும், மார்ச் 22ம் தேதி புஷ்ப பல்லக்குடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.