திருவாலங்காடு: மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு டிக்கெட் பெற இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்வதால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், 2010ம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பரிகார பூஜையில், காலை 6:00 மணி – மதியம் 1:00 மணி வரை, எட்டு குழுக்களாக பூஜையில் பங்கேற்று வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். ஒரு நபருக்கு 1,600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை கோவில் அலுவலகத்தில் டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில், இரண்டு மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதற்கு முன், ‘ஆன்லைன்’ மூலம் டிக்கெட் பெற்ற போது சிரமமின்றி இருந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாந்தீஸ்வரர் பூஜைக்கான டிக்கெட்டை, மீண்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை கோவில் நிர்வாகம் கொண்டு வரவேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.