கம்பம்: கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கருடாழ்வாரை மேள தாளத்துடன் அழைத்து கொண்டாடினர்.
கம்பம் யாதவர் மடாலய வளாகத்தில் யதுகுலவல்லி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணருக்கு பாலாபிஷேகம் செய்தனர். பெண்கள் பொங்கல் பானைகளுடன் சென்று, கம்பராயப் பெருமாள் கோயிலில் பொங்கல் வைத்து காசி விஸ்வநாதரையும், சிவபெருமானையும் வழிபட்டனர்.
உற்சவர் கம்பராய பெருமாளையும், அவரது வாகனமான கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக வேணுகோபால கிருஷ்ணன் கோயிலிற்கு வந்தனர். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை, நரசிம்மர், கிருஷ்ண அவதார வேடங்களை அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். மகிழ்வும், மனநிறைவும் நிரம்பிய வாழ்க்கை அக் காலத்திலா , இக்காலத்திலா என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் சமது தலைமையில் பட்டி மன்றம் நடந்தது. கம்பராயப்பெருமாள் திருமஞ்சனம், கம்பராயப் பெருமாள் திருவாரதனம், மங்கள ஆரத்தி, இரவு 8 மணியளவில் கம்பராயப் பெருமாள் கருடவாகனம் ஊர்வலமாக புறப்பட்டு வேலப்பர் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறுதல், உறியடி நிகழ்ச்சிகள் நடந்தது. சுவாமி கம்பராயப் பெருமாள் கோயிலிற்கு சென்றடைந்தார். விழா ஏற்பாடுகளை கம்பம் யாதவ மகாசபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.