மயிலாடுதுறை: சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப் பிரவேசத்துக்கு பயன்படுத்தும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவிகைப்பல்லக்கு மற்றும் நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, யானை தந்த பல்லக்கு உழவுக்கு பயன்படும் ஏர் கலப்பை, ஈட்டி, வாள், துப்பாக்கி, உள்ளிட்டவைகளுக்கு படையல் இட்டு ஆதீனம் குரு மகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு செய்தார்.
தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தில் இன்று ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதீன பூஜை மடத்தில், பார்வதி, லெட்சுமி மற்றும் சரஸ்வதி உருவத்தை ஆவாகனம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானங்கள் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிவிகைப் பல்லக்கு, நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப் பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி, உள்ளிட்ட ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தபட்டு வரும் தொன்மை வாய்ந்த பொருட்களுக்கும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஏர் கலப்பை, நெல் அளக்கும் கருவிகள் பழைமையான ஆதீன நூல்களுக்கும் சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட சோடஷ உபசார தீபாராதனை உள்ளிட்ட 16 விதமான ஆராதனைகள் செய்யது, சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதில், ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.