பதிவு செய்த நாள்
01
டிச
2020
01:12
தஞ்சாவூர்: தஞ்சை அருகே 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால ஜேஷ்டா தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே அடஞ்சூர் கிராமத்தில், ஒப்பிலா அம்பிகை உடனுறை அனந்தீசுவரர் கோவிலின் திருச்சுற்று மதில் சுவரின் வெளிப்புறத்தில், மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில், 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட ஜேஷ்டாதேவியின் புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து வரலாறு மற்றும் சுவடியியல் ஆய்வாளரும், சரசுவதி மகால் நுாலகத் தமிழ்ப் பண்டிதருமான மணி மாறன் கூறியதாவது; ஜேஷ்டாதேவி சிற்பத்தின் இருபுறமும், மகன் குளிகன் எனப்படும் மாந்தன், மகள் மாந்தி ஆகிய இருவரின் புடைப்புச் சிற்பங்களும், மேற்புறத்தில் காக்கை, துடைப்பம் போன்ற இரு உருவங்கள் உள்ளன.
பூர்வகரணாகமம் என்னும் வடமொழி நுாலில், ஜேஷ்டாதேவியின் மகன் இடபவத்திரன் எனப்படும் காளை முகத்துடனும், இவனுடைய வண்ணம் செவ்வண்ணம் என்றும், மகள் பொன்வண்ணத்தில், அக்னிமாதா என்னும் பெயரைக் கொண்டுள்ளதாக குறிப்பட்டுள்ளனர். இந்நூலில் ஜேஷ்டாதேவியின் உருவத்தை வடிப்பதற்கான விதிமுறைகளும் காணப்படுகின்றன. அதே போல் போதாயன கிருகியசூத்திரம் என்னும் நுாலில் ஜேஷ்டா வழிபாட்டு முறையும், பலன்களையும் விவரிக்கிறது. தமிழ்நாட்டில், திருமகள், கொற்றவை, மாரியம்மாள், பச்சையம்மாள் போன்ற பெண் தெய்வ வழிப்பாட்டில், ஜேஷ்டாதேவி வழிபாடும் இருந்துள்ளது. காலபோக்கில் ஜேஷ்டாதேவி வழிப்பாடு மக்கள் மத்தியில் நின்று போனது. இச்சிலையினைக் குப்புறப் படுக்கவைத்து மண்ணால் மூடி மறைத்து விட்டனர். திருமகளின் தமக்கையாகக் கருதப்படும் ஜேஷ்டாதேவியை தவ்வை, மாமுகடி, முகடி என்றெல்லாம் திருக்குறள் குறிப்பிடுகின்றது.
மேலும், ஜேஷ்டை பற்றி நந்திக்கலம்பகம், கம்பராமாயணம், ஆழ்வார் பிரபந்தம், நிகண்டு நுால்களான ஆசிரிய நிகண்டு, பிங்கல நிகண்டு, சேந்தன் திவாகரம், சங்க நுால்களான பதிற்றுப்பத்து, பரிபாடல், நல்வழி போன்ற நூல்களும் பேசுகின்றன. இதுபோல கல்வெட்டுகளிலும் இத்தேவி குறித்த செய்திகளைப் பார்க்க முடிகிறது. இந்த இலக்கிய, புராண மரபுகளுக்கு ஏற்றபடியே ஜேஷ்டாவின் சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன. கி.பி. 7ம் நுாற்றாண்டு முதல் 10ம் நுாற்றாண்டு வரை தமிழகத்திலும், கர்நாடகத்திலும் ஜேஷ்டாதேவி தாய்க்கடவுளாக வணங்கினர். திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவிலில் தனி கருவறை அமைந்துள்ளது. கி.பி. 773 ம் ஆண்டு ஜேஷ்டாவின் உருவத்தையும் கோவிலையும், பாண்டிய மன்னன் மாறன் சடையனின் தளபதி சாந்தன் கணபதியின் மனைவி நக்கன் கொற்றி என்பவள் நிறுவியதாக கல்வெட்டு செய்தியாகும். பாண்டியரை அடுத்து பல்லவரும், சோழரும் ஜேஷ்டாதேவியின் உருவங்களை செதுக்கினர். முதலாம் ராஜராஜன் ஜேஷ்டைக்கென தனிக்கோவில் ஒன்றினை அன்றைய பாச்சில் கூற்றத்து அன்பனுாரில் (திருச்சி மாவட்டம்) நிறுவினான்.
கி.பி. 9ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தொண்டரடிப் பொடியாழ்வார் பல நன்மைகளைத் தரக்கூடிய நாராயணனை விடுத்து மக்கள் ஜேஷ்டையினை வழிபடுகின்றனரே என்று வருந்தி முறையிட்டார். இதனால் ஜேஷ்டாதேவியினை மக்கள் வெறுத்ததும் தெரியவருகின்றது. இதன் விளைவாக பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய திருமகளுக்கு முன் தோன்றிய மூதேவியுடன் இணைத்து பேசப்பட்டாள். ஜேஷ்டாதேவி என்ற சொல்லுக்கு முதன்மை வணக்கம் பெறத்தக்கவள் என்ற பொருள். மூத்ததேவி, என்ற காலபோக்ககில், மூதேவியாகி மாறி போனது என்றார்.