முட்புதருக்குள் சிதிலமடைந்த சிவன் கோயில் கண்டுபிடிப்பு : சீரமைக்குமா தொல்லியல் துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2025 01:04
மேலூர்; உடன்பட்டியில் முட்புதருக்குள் மக்கள் கண்டுபிடித்த சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வரலாற்று முக்கியத்துவத்தை வெளி கொண்டு வர வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இ.மலம்பட்டி ஊராட்சி உடன்பட்டியில் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் கருங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் புதையுண்டு கிடக்கவே ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து முட்செடிகளை அகற்றினர். அவ்விடத்தில் கோயில் இருப்பதையும் சிலைகள் மற்றும் காம்பவுண்ட் சுவர் சிதிலமடைந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். வருவாய்த்துறையினரை மக்கள் தொடர்பு கொண்ட போது கோயில் உள்ள இடம் அரசு தரிசு நிலம் என்று ஆவணத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் கூறியதாவது : கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்வதற்கு வசதியாக முட்செடிகளை அகற்றியுள்ளோம்.. அதில் நாலடி உயரமுள்ள சிவலிங்கம், ஆவுடை மற்றும் கோயில் முழுவதும் கல்வெட்டுகள் நிறைந்தும், மணலுக்குள் புதைந்து காணப்படுகிறது. அதனால் தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு செய்து வரலாற்று முக்கியத்துவத்தையும் சிதைந்த சிவன் கோயிலை சீரமைத்து மக்கள் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.