பதிவு செய்த நாள்
19
ஏப்
2025
10:04
சபரிமலை; சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை சன்னிதானத்தின் பின்புறம் பாரம்பரியமான பஸ்ம குளம் உள்ளது. பக்தர்கள் இந்த குளத்தில் குளித்த பின்னர், ஸ்ரீ கோவிலில் அங்க பிரதட்சணம் செய்துவிட்டு, மீண்டும் குளத்தில் குளித்து திருநீறு அணிந்து செல்வர். தற்போது கூட்டம் மிகவும் அதிகரித்துள்ளதால், சீசன் காலங்களில் அங்கப்பிரதட்சணத்திற்கு அனுமதி கிடையாது. சபரிமலை மாஸ்டர் பிளான் படி, கோவிலின் கிழக்கு பக்கத்தில் பஸ்ம குளம் அமைக்க நேற்று பூமிபூஜை நடந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பணியை தொடங்கி வைத்தனர். மொத்தம், 15.72 மீட்டர் அகலமும், 25 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பஸ்ம குளம், 13 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது. ஐந்தடி தண்ணீர் இருக்கும். தண்ணீரை சுத்திகரிக்க, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு இயந்திரங்கள் குளத்தின் பக்கத்தில் அமைக்கப்படுகிறது. ஆறு மாதத்தில் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர் ஒருவரின் நன்கொடையில் குளம் அமைக்கப்படுவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.