பதிவு செய்த நாள்
30
மே
2012
03:05
16. மன்னன் சுவேதனும், மன்னன் வினிதஷ்வனும்
அடுத்து வராகம், பிருதிவிக்கு விஷ்ணுவைப் பூசிப்பதற்கான சடங்குகள் பற்றி கூறிற்று. கார்த்திகை மாதம் துவாதசி திதி இதற்கான நந்நிமித்தம், மங்களகரமானதும் கூட. சந்திரக்கிரகண நாட்களும் சிறந்தவையேயாகும். ஆனால், இத்தகைய விரத காலங்களில் தண்டுலதானம் (அ) சிறிதளவு அரிசி அளிக்க மறந்துவிடக்கூடாது. மறந்தால் உனது நிலை சுவேதன், வினிதஷ்வன் நிலை போல் சங்கடமானதாகி விடும் என்று அவ்விருவர் வரலாற்றினைக் கூறலுற்றார். இளவ்ரிதவர்ஷத்தின் மன்னன் சுவேதன். அவன் பல யாகங்கள் செய்து பொன், ஆபரணங்கள், குதிரைகள், யானைகள் என்று பற்பல தானங்கள் செய்தான். வசிஷ்டர் அவனிடம் அவற்றுடன் அரிசி தானமும் செய்யுமாறு கூறியும், அவன் அந்த அறிவுரையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவன் மரணமடைந்தவுடன் சொர்க்கத்தை அடைந்தான். அவன் விண்ணுலகில் எங்கும் உலவி வந்தான்; அப்சரஸுகளுடன் களித்தான். அவனுக்குப் பலவகையான உணவுகள் கிடைத்தன அரிசியைத் தவிர. அரிசி சோற்றுக்காக அவன் ஏங்கினான். அவன் உலகுக்குத் திரும்பிவந்து அவனுடைய ஈமச்சடங்குகள் நடந்த இடத்தில், அவனுடைய சாம்பல் இன்னும் இருந்தது. எனவே தன் ஏக்கம் தீர அவன் அந்தச் சாம்பலை நக்கினான். அவனுடைய பரிதாப நிலையை, ஒருநாள் அங்கு வந்த வசிஷ்டர் கண்டு அவனிடம் அரிசிதானம் அளிக்காததன் பலன் அது என்று கூறி, நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெறுவோம் என்று சொல்லியதுடன் வினிதஷ்வன் சரிதத்தைக் கூறினார்.
வினிதஷ்வ மன்னன்
மன்னனின் புரோகிதர்கள் அவனிடம் எள், நீர், கருப்பஞ்சாறு, பசு போன்ற உருவமைப்பட்ட வெல்லப்பாகு ஆகியவற்றைத் தானம் கொடுக்குமாறு கூறினார். பதிலாக மேற்படி பொருள்களை ஒரு பானையில் வைத்துத் தானம் கொடுக்கலாம். இதில் பானை பசுவுக்கு சமமாகும். இவற்றுடன் மற்ற உணவுப்பொருள்கள், தங்கம், நகைகள், பாத அணி, குடைகளும் தானம் செய்யலாம். வினிதஷ்வன் அறிவுரைப்படி நடக்காததால் சொர்க்கத்தில் பசியினால் வாடினான். கன்று ஈனும் நிலையில் உள்ள பசுவை நீராட்டி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அலங்கரித்து, ஒரு சற்பாத்திரம் அறிந்து தானம் அளித்தால் ஏற்படும் பலனையும், மகிமையையும் வராகம், பிருதிவிக்குக் கூறிற்று. ஏழையான-ஆனால் நெறி தவறாத அந்தணற்குத் தானம் அளிக்க வேண்டும்.
இத்தகைய சடங்குகளால் சுவேதாவின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு முக்தி கிடைத்தது. இதுவரையில் சொல்லப்பட்டவை எல்லாம் வராக புராணத்தின் பகுதியான வராக சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளவை. இவையாவும் பிரம்மனால் போதிக்கப்பட்டு, பின்னர் பிரம்மாவால் பரப்பப்பட்டவை. பிரம்மாவிடமிருந்து முறையே புலஸ்தியர், பரசுராமர், உக்கிரர், மனு ஆகியோருக்குப் பரவியது. சூத முனிவர், சனகாதி முனிவர்கள் இதை மேலும் பரப்புவர். கார்த்திகை மாத துவாதசி அன்று இதைப் படித்தால் வசதிகளும் பரத்திலும் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறும்.
17. விஷ்ணுவைப் பிரீதி செய்தல்
வராகம் பிருதிவியுடன் கூறியதான சமயச் சடங்குகள் பற்றி பெரிதும் வியப்பு அடைவதில்லை. ஆனால் உண்மையான மனப்பூர்வமான பக்தியொடு செய்யும் வந்தனமே தன்னைத் திருப்திபடுத்தும் என்றார். விஷ்ணுவைத் திருப்தி செய்ய துவாதசி அன்று வெள்ளை ஆடை உடுத்தி, வெண் மலர்கள் கொண்டு பூசித்தல் வேண்டும். ஒழுக்க ஒளியுடைய, நேர்மையான பிராமணன் அவர் அருளை நிச்சயம் பெறுவான். பணிவுடமை, விருந்தோம்பல், நற்காரியங்களைப் போதித்தல், தானங்கள் வழங்கும் மன்னனும் பகவான் விஷ்ணுவின் அருள் பெறுவான். வைசியன் மற்றவர்களுக்கு உதவியாகவும், இணக்கம் உள்ளவனாகவும், குருபக்தி மிக்கவனாகவும், பேராசை இன்றியும், தூய உள்ளமும் நற்பழக்கங்கள் உள்ளவனாகவும் இருக்க வேண்டும். நான்காம் வருணத்தார்கள் கோபம், ஆசை, பேராசை, காமம், தீமை அகற்றி, தயை, தருமகுணம் விரதங்கள் நம்பிக்கை, பிராமணர்களிடம் பயபக்தி பெற்றிருக்க வேண்டும். ஆக, எல்லா வருணத்தினரும் பகவான் விஷ்ணுவின் அருளைப் பெறத் தக்கவர்களே.
தாவர உணவுண்டு, அமைதியுடன் தியானம் செய்து, பிரம்மச்சரியம் அனுஷ்டித்து, குறிப்பிட்ட நாட்களில் தவறாமல் சமயச் சடங்குகள் செய்து, மனதில் பொறாமை, கர்வம், தன்னலமின்றி இருப்பின் அப்படிப்பட்டவர்களுக்கு ஸ்ரீவிஷ்ணு அருள்பாலிக்கிறார். மாறாக தன்னலம், அகம்பாவம், விருந்தினரிடம் அவமரியாதை, கண்டதைக் கண்டபடி உண்ணுதல், மற்றவர்க்கு உதவாதிருத்தல் போன்ற தவறான நெறிகளில் ஒழுகுபவர்களை வறுமையில் வாடவும், துயரத்தில் மூழ்கி அவதியுறுமாறும் சபிக்கிறார். திருப்தி கொண்ட மனிதன், கற்புடைய மனைவியரை ஆசிர்வதிக்கிறார். விஷ்ணுவால் வெறுக்கப்படும் பல காரியங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
1) தூய்மையற்ற பொருள்களை உட்கொள்ளுதல் 2) நீராடாமல் சவங்களைத் தொட்டபின், மயான பூமியிலிருந்து நேராக வருபவர்கள் பூசை செய்தால் வெறுக்கப்படுவர். 3) நீலம், கருப்பு, சிவப்பு உடை, அழுக்கான மடியற்ற உடை, மற்றவர் உடை அணிந்து பூசை செய்வது விஷ்ணுவுக்குப் பிடிக்காது. 4) கோபமுடன் பூசிக்கக் கூடாது. 5) மீன் (அ) வாத்து மாமிசம் உண்ட பின் பூசிப்பதை அவர் வெறுக்கிறார். 6) பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்தியம் செய்யப்படாத பொருளை அளித்தல். 7) பெருங்காயம் உட்கொண்டு, மது அருந்திவிட்டு விஷ்ணுவைப் பூசை செய்யக்கூடாது. 8) பன்றி மாமிசம் விற்பதோ, உண்பதோ கூடாது. 9) காலணி அணிந்து குளத்துக்கருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 10) மங்கல வாத்தியங்கள் இன்றி விஷ்ணு ஆலயத்தைத் திறக்கக்கூடாது.
18. துர்ஜயனும், சிந்தாமணியும்
சத்யயுகத்தில் மன்னன் சுப்ரதிகனுக்கும், அவன் மனைவி வித்யுத் பிரமாவுக்கும் துர்ஜயன் என்றொரு மகன் பிறந்தான். துர்வாச முனிவர் துர்ஜயனுக்கு ஒரு வரமும், ஒரு சாபமும் தந்தார். அவன் யாருடைய கண்களில் புலப்படாமல் இருக்குமாறு வரமும், கடின இதயம் கொண்டவனாக இருக்க வேண்டுமென்கிற சாபமும் துர்வாச முனிவரால் ஏற்பட்டன. துர்ஜயன் மந்தர மலைக்குச் சென்ற போது அங்கு இரண்டு அழகிய பெண்களைக் கண்டான். ஹெட்ரியின் மகள் சுகேஷி, சுஹேத்ரியின் மகள் மிச்ரகேசி. அந்த அழகிகள் மீது காதல் கொண்டு அவர்களை மணந்து இரண்டு புத்திரர்களைப் பெற்றான். துர்வாசரிடம் மறைந்து இருக்கும் வரம் பெற்ற துர்ஜயன் மூன்று உலகங்களையும் வென்று, இந்திரனையும் சொர்க்கத்திலிருந்து விரட்டி அடித்தான்.
ஒரு சமயம் துர்ஜயன் வேட்டையாடச் சென்றவன் கவுரமுகர் என்ற முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அவனுடன் ஏராளமான படைவீரர்களும் இருந்தனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தல் எளிதான காரியமல்ல. எனினும் முனிவர், தான் நாராயணனிடமிருந்து பெற்ற அதிசய சிந்தாமணி என்னும் ரத்தினத்தின் உதவியால் துர்ஜயனுக்கும், அவனது படைவீரர்களுக்கும் உண்ண உணவும், இருக்க இடமும் ஏற்பாடு செய்தார் கவுரமுக முனிவர். (சிந்தாமணி, கல்பதரு போல் கேட்டதைக் கொடுக்கவல்ல ரத்தினம் ஆகும்.) பேராசை கொண்ட துர்ஜயன் அந்த அதிசய சக்திவாய்ந்த மணியைப் பெற ஆசை கொண்டான். அதற்காகத் தனது அமைச்சர் விரோசனனை முனிவரிடம் அனுப்பினான். ஆனால், கவுரமுக முனிவர் அதைத் தர முடியாதென்று கூறி மறுத்துவிட்டார். துர்ஜயன் அதற்காக ஒரு படையை ஏவினான். ஆனால், முனிவரிடமிருந்து அந்த சிந்தாமணியை முனிவர் வேண்ட அதிலிருந்து வீரர்கள் தோன்றி மந்திரி விரோசனனைக் கொன்றனர்.
ஹெட்ரி, சுஹேத்ரி இருவரும் துர்ஜயனுக்கு உதவியாக அவரவர் படையை அனுப்பினர். கவுரமுக முனிவர் விஷ்ணுவை வேண்ட விஷ்ணு தனது சக்கராயுதத்தால் அனைவரையும் கொன்றார். காலத்தில் நிமேஷம் (அ) நிமிஷம் என்பது சிறு அளவு போரில் இத்தகைய பெரிய படையை விஷ்ணு நிமிஷ மாத்திரத்தில் அழித்ததால் அந்த இடம் நைமிசாரணியம் என்ற பெயர் பெற்றது. துர்ஜயனின் மரணம் அவனது தந்தை சுப்ரதீகனுக்குப் பெரும் துயரம் விளைவித்தது. எனினும் அவன் விஷ்ணு பக்தியிலிருந்து சிறிதும் மாறவில்லை. இதனால் மகிழ்ச்சியுற்ற பகவான் விஷ்ணு திருப்தியுற்றவராய் அவருடைய நிஜ உருவைச் சுப்ரதீபனுக்குக் காட்டி முக்தி அளித்தார். கவுரமுக முனிவர் நைமிசாரணியத்தில் பிரபாசம் என்ற இடத்தில் தவம் செய்யலானார். அங்குத்தான் அவர் மார்க்கண்டேய முனிவரை சந்தித்தார். மார்க்கண்டேயர் அவருக்கு உத்திரக்கிரியை சடங்குகள் பற்றி அறிவுரை பகர்ந்தார்.
19. திதிகள்
சிந்தாமணியிலிருந்து தோன்றிய படைவீரர்கள், விஷ்ணுவின் கருணையால் அரசர்கள் ஆயினர். அவர்களில் ஒருவன் பிரஜாபலன். ஒரு சமயம் மகாதபன் என்ற சக்திவாய்ந்த முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றான். மகாதபன் என்னும் அம்முனிவர் பிரஜாபலனுக்குத் திதிகளைப் பற்றிக் கூறினார். சில திதிகள் மிகவும் பலன் அளிப்பவை. இந்த நாட்களில் நடத்தும் பூஜைகள், மந்திர உச்சாடனங்கள் பெருமளவில் பலன்கள் தரும்.
1. முதல் திதி-பிரதிபத : (பிரதமை) இது அக்கினியின் தொடர்புடையது. பிரம்மா பிரதமை அன்றே தன் கோபத்திலிருந்து அக்கினியைத் தோற்றுவித்தார். இது அக்கினி பூஜைக்கு உகந்த நாளாகும்.
2. துவிதியை : அசுவினி தேவர்கள் இருவர்களின் பூசைக்குகந்த நாள் இது. இவர்கள் அசுவினி குமாரர்கள் என்ற பேரும் கொண்ட தேவலோக வைத்தியர்கள்.
3. திருதியை : ருத்திரனுக்கு உகந்த நாள் இது. தம்பதியர்கள் இணைபிரியாது குடும்ப மகிழ்ச்சியில் திளைக்க இந்த திதியில் பூசை செய்தால் மங்களம் பெறுவர். சிவபார்வதி திருமணம் திருதியை திதியில் நடைபெற்றது. எனவே இது ஒரு நல்ல சகுனத்திதி. இந்தத் திதியில் ருத்திரனைப் பூசை செய்ய வேண்டும்.
4. சதுர்த்தி : இத்திதி கணேசர் (அ) வினாயகருக்குகந்த திதி ஆகும். கணபதி பிறந்தது சதுர்த்தி திதியில். அதனால் தான் விநாயக சதுர்த்தி பூஜை புனிதமானது. இந்த விரதம் அனுஷ்டித்து எள் உண்டால் புண்ணியம் ஏற்படும்.
5. பஞ்சமி : இந்தத் திதியில் புளிப்பு ஆகாரம் கூடாது. புற்றில் பாம்புக்கு பால் அளித்தல். இந்த நாளில் தான் பிரம்மா எல்லா பாம்புகளையும் கூட்டி நாகலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.
6. ஷஷ்டி : இது முருகனுக்குரிய திதி. அன்று முருகப்பெருமானைப் பூசித்தால் உடல் நலம், நீண்ட ஆயுள், கோரிக்கைகள் நிறைவேறும். அன்று பழம் மட்டும் உண்டு முருகனுக்கு அர்ச்சனை செய்து பூஜித்தால் கோரிக்கைகள் பலிக்கும். அனைவருக்கும் ÷க்ஷமம் ஏற்படும். இதுபற்றி ஒரு முதுமொழியும் உண்டு-சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் அதாவது சஷ்டியில் உபவாசம் இருந்து முருகனைப் பூஜிக்கும் பெண்களின் கருப்பையில் கரு ஏற்பட்டுக் குழந்தை பிறக்கும். ஷஷ்டி திதி அன்று பிரம்மா கார்த்திகேயனைத் தேவசேனாபதி ஆக்கினார்.
7. சப்தமி : சூரியனுக்கு உகந்த நாள் சப்தமி. இதற்கு அதிபதி அவனே. ரதசப்தமி ஒரு சிறப்பான சூரியனுக்கு பூசை செய்யப்படும் நாள். சூரியனுக்குப் பாயாசம் நைவேத்தியம் செய்து பூசித்தால் எல்லா வகையிலும் சூரியன் கருணை கிடைக்கும்.
8. அஷ்டமி : எட்டு மாதர்கள் தோன்றிய நாளாகும். இவர்கள் அந்தகன் அழிவுக்குக் காரணமானவர்கள். அன்று அஷ்டமாதர்களைப் பூசை செய்வது விசேஷமாகும்.
அந்தகனுடன் போரில் அம்பிகை வெற்றி பெற்றது மட்டுமின்றி, கிருஷ்ண பகவானுக்காக அவருடைய பிறந்த நாளன்று கோகுலாஷ்டமி பூசை நடைபெறுகிறது.
9. நவமி : இந்தத் திதி நாளில் வெட்றசூரன் என்பவன் காயத்திரி தேவியால் கொல்லப்பட்டான். மேலும் ஸ்ரீராமபிரான் நவமியில் பிறந்ததால் ஸ்ரீராம நவமி விழாவும் இந்தத் திதியில் நடைபெறுகிறது. நவமி அன்று சரசுவதி பூஜை, ஆயுத பூஜை விசேஷம்.
10. தசமி : தசமி அன்று தயிர் மட்டும் உட்கொண்டு, பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட பத்து தேவியரைப் பூசித்தல் வேண்டும். மற்றும் மகிஷாசுரனை தேவி கொன்ற இந்த நாள் விஜயதசமி என்று மிகவும் விசேஷமாய் கொண்டாடப்படும். பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட பத்து தேவியரும் பிரம்மா பத்து தேவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார். பூர்வாவை இந்திரனுக்கும், பச்சிமாவை வருணனுக்கும், உத்தரத்தைக் குபேரனுக்கும், தக்ஷிணத்தை யமனுக்கும், ஊர்த்துவத்தைச் சுவாயமுக்கும், அத்வத்தை சேஷநாகத்துக்கும், ஆக்கினேயத்தை அக்னிக்கும், நைருதியை நிருதிக்கும், ஈசானத்தைச் சங்கரனுக்கும், வாயவ்யத்தை வாயுவுக்கும் திருமணம் செய்து வைத்தார் பிரம்மா. இவை பத்தும் பத்து திசைகளைக் குறிப்பவை.
11. ஏகாதசி : இந்தத் திதியில் பிரம்மா குபேரனைத் தோற்றுவித்தார். அவர் ஆணைப்படி குபேரன் நிதிக்கதிபதி ஆனான். ஏகாதசி விரதம் அன்று வெறும் பழம் மட்டும் உண்டு குபேரனைப் பூசை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். (ஏகாதசி விஷ்ணுவுக்கும் உகந்த திதி. வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் விசேஷமானது.)
12. துவாதசி : வாயுவின் வேண்டுகோளை ஏற்று நாராயணன் விஷ்ணுவான நாள் இது. விஷ்ணு தன் நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் கொண்டுள்ளார். தெய்வீகம் மிக்க ஜயந்தி மாலை அணிந்துள்ளார். துவாதசி அன்றுதான் லக்ஷ்மி விஷ்ணு பத்தினி ஆனாள். துவாதசி அன்று லக்ஷ்மியையும் நாராயணனையும் ஒன்றாகப் பூசிப்பது மிகவும் விசேஷ பலன் அளிக்கும். பூசை முடிந்தவுடன் பிராம்மணர்களுக்கு நெய், தேன் தானம் தருவது நன்மை பயக்கும். (ஏகாதசி, துவாதசி இரண்டையும் இணைத்து ஒரு பழமொழி உண்டு. அதாவது ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்பது அது.)
13. திரயோதசி : இந்தத் திதியில் பிரம்மா, தரும தேவதையைச் சாந்தப்படுத்தினார்.
14. சதுர்த்தசி : இது ருத்திரனுக்கு உகந்த நாள். அன்று உபவாசம் இருந்து, ருத்திரனைப் பற்றி பேசுவதும், அவன் கீர்த்தனையைக் காதால் கேட்பதும் பாவநிவாரணம் அளிக்கும்.
15 அ. அமாவாசை : தன்மந்திரங்களை அமாவாசை அன்று கவுரவித்தல் நலன் பயக்கும். பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட தன்மந்திரங்கள் உயிர்களனைத்துக்கும் பித்ரு ஸ்தானம் கொள்ளுமாறு பிரம்மா அவர்களுக்கும் கூறினார். அமாவாசை தர்ப்பணம் பித்ருக்களின் திருப்திக்காகச் செய்யப்படுகிறது. இதனால் மனதிருப்தியும், கோரிக்கைகள் நிறைவேறுவதுமாகிய பலன்கள் கிட்டும்.
15 ஆ. பவுர்ணமி (அ) பூர்ணிமா : இது சோமன் எனப்படும் சந்திரனின் நாள். சந்திரன் தக்ஷனின் 27 மகள்களை (அ) நட்சத்திரங்களை மணந்து, ரோகிணி மீது அன்பு அதிகம் காட்டிட அதனால் கலைகள் தேய்ந்து போகுமாறு சபிக்கப்பட்டதும், சிவபெருமான் கடைசி பிறையைத் தலையில் ஏந்தி வளரச் செய்ததும் பல புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்தி. அமிர்த மதனத்தின்போது சோமவானம் தோன்றியது என்பது சந்திரன் தோன்றியதைக் குறிக்கும். பூர்ணிமா அன்று உண்ணாநோன்பு இருந்து விரதம் இருந்தால் செல்வவளம் செழிக்கும்.
20. கத்ருவும் வினுதையும்
நாகபஞ்சமி பாம்புகள் பூசைக்கு உகந்த நாள். பால் வார்த்து பூசிப்பது வழக்கம். பிரம்மா எல்லா விஷப் பாம்புகளையும் உண்டாக்கினார். அவற்றுள் அனந்தன், வாசுகி, கார்க்கோடகன், பதுமன், மகாபத்மன், கம்பனன் ஷங்கன், குளிகன், பாபா, ரஜிதா, மற்றும் அபராஜிதா. இந்தப் பாம்புகள் மக்களை அழித்து வரவே, தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிரம்மா பாம்புகளைக் கூப்பிட்டு நீங்கள் மற்ற உயிர்களை அழிப்பதால், நீங்கள் உங்கள் தாயாராலேயே அழிக்கப்படுவீர். உங்கள் உயிர்கள் அழிக்கப்பட்டு விடும் என்றார். அப்போது பாம்புகள் எங்களுக்கு விஷமும், கடிக்கும் குணமும் உங்களாலேயே கொடுக்கப்பட்டன. நாங்கள் எவ்வாறு அதற்குக் காரணமாவோம்? எனவே எங்களுக்குக் கருணை காட்டுங்கள். நாங்கள் வாழ்வதற்காக ஒரு தனி இடம் ஏற்பாடு செய்யுங்கள். அதன்படி அவை பாதாள, விதல, சுதல லோகத்தில் வசிக்க ஆணையிட்டார்.
பாம்புகளிடம் பிரம்மா அடுத்த கல்பத்தில் காச்யப முனிவருக்கும் அவள் மனைவி கத்ருவுக்கும் குழந்தைகளாகப் பிறப்பீர்கள் என் வரமளித்தார். கத்ருவும், வினுதையும் தக்ஷணது புத்திரிகள். காசியபமுனிவரை மணந்தனர். கத்ரு காசியபரின் வரம் வேண்டி ஆயிரம் விஷமுள்ள பாம்புகளைப் பெற்றாள். வினுதை, கத்ருவின் குழந்தைகளை விட சக்திவாய்ந்த இரண்டு குழந்தைகளை வேண்டிப் பெற்றாள். அவளுடைய இரண்டு கருவில் ஒன்றை அழிக்க முயல குழந்தை முடமாக பிறந்தது. அதன் பெயர் அருணன். அருணன் சூரியனுக்குத் தேரோட்டி ஆனான். இப்படி அருணனுக்கு ஏற்பட்ட நிலையினால் கோபம் கொண்ட அருணன் தாயைக் கத்ருவின் அடிமையாகப் பல ஆண்டுகாலம் இருக்குமாறு சபித்தான். மேலும் அருணன் வினுதையிடம் மற்றொரு கரு நன்றாகப் பிறந்து அதன் தாயை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பான் என்றான்.
உச்சைச்வரசு இந்திரனின் குதிரை. கத்ருவும், வினுதாவும் ஒருமுறை அதன் வாலில் நிறம் பற்றி பந்தயம் கட்டினர். வினுதா அது வெள்ளை என்றுகூற, கத்ரு அது தவறு. அதன் வால்கருப்பு என்றாள். பந்தயத்தில் தான் தோற்றுவிடும் பயத்தால் கத்ரு தன் குழந்தைகளாகிய பாம்புகளைக் குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டு கருப்பாக தோன்றுமாறு செய்யச் சொன்னாள். உண்மையற்ற தாயின் வார்த்தைக்கு சில பணிய மறுக்க, அவற்றøச் சர்ப்பசத்ர யாகத்தில் அவை அழிக்கப்படும் என்று சபித்தாள் அத்தாய். (பின்னர் ஜனமேஜயன் சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் அழிந்தன.) பந்தயத்தில் தோற்றதால் கத்ருவுக்கு வினுதை அடிமையாக இருக்க வேண்டி ஏற்பட்டது. வினுதாவுக்கு இரண்டாவதாகக் கருடன் பிறந்தான். பாதி பறவை, பாதி மனித உடல் கொண்டதாயிற்று. கண்களும் நகங்களும் உணவைத் தேடிக் கிழிக்க உதவும் பறவை போல் அமைந்தன. முகம் வெளுப்பாயிருந்தது. இறக்கைகள் சிவப்பு நிறம், உடல் பொன்னிறம். கருடனுக்குச் சர்ப்பங்கள் உணவாகும் என்று பிரம்மா வரம் அளித்தார். பாம்புகள், கருடனிடம் அவன் அமிர்தம் கொண்டு வந்து கொடுத்தால் அவன் தாயார் விடுதலைப் பெறுவாள் என்றன. நேராக அமிர்தத்தைத் தராமல் குசப்புல் போல் அமிர்தம் இருக்குமாறு உபாயம் செய்ய பாம்புகளுக்கு முன் கரண்டி போன்ற நாக்கு ஏற்பட்டது. அதனால் பாம்புகளுக்கு கருடன் மேல் வெறுப்பு ஏற்பட்டது. பாம்புகள் ஆயுள் முடிவு வரை மட்டுமே கடிக்கும். கருட மந்திரம் அறிந்தவர்களை, நல்லவர்களைக் கடிக்காது.
21. வெட்ராசுரனும் காயத்திரியும்
(வராக புராணத்தில் மட்டுமே உள்ளது இக்கதை)
வெட்ராசுரனின் தந்தை விருத்திரன் முற்பிறவியில் கடல் நுரையால் இந்திரனால் கொல்லப்பட்டான். மறுபிறவியில் விருத்திரன் முற்பிறவியில் நடந்ததை அறியலானான். எனவே அவன் இந்திரனைக் கொல்ல ஒரு மனிதனை வேண்டினான். வேட்ரவதி ஆறு ஒரு பெண்வடிவில் விருத்திரனை மணந்து வெட்ராசுரனைப் பெற்றாள். அவன் தேவர்களுக்குப் பரம விரோதி ஆனான். பிரக்ஜோதிஷ்புர மன்னனாகி உலகை எல்லாம் வெற்றி கொண்டனான். வெட்ராசுரன் மற்றவர் கண்களுக்குப் புலப்படாதவன். எனவே தேவர்கள் சிவனிடம் முறையிட அவர் பிரம்மாவிடம் அழைத்துச் சென்றார். அப்போது பிரம்மா கங்கைக் கரையில் அமர்ந்து காயத்திரி மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தார். ஆனால் பிரம்மாவுக்கு தெரியவில்லை. காயத்திரி மந்திரத்தின் அதிதேவதையான காயத்ரிதேவி திடீரென்று அங்கு தோன்றினாள். அத்தேவிக்கு எட்டு கரங்களில், வெவ்வேறு ஆயுதங்கள் இருந்தன. வெள்ளைக் கலை உடுத்தி இருந்தாள். அவள் பல ஆண்டுகாலம் வெட்ராசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றாள். சிவன் அவளைப் புகழ்ந்து துதி பாடினார். இமயமலையில் காயத்திரிக்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்தார் பிரம்மா.
22. விரதங்கள்
1. சித்திரை-சுத்த (வளர்பிறை) துவாதசியில் வாமனனாகிய நாராயணனை பூசிக்க வேண்டும்.
2. வைகாசி-வளர்பிறை துவாதசி. பரசுராம துவாதசி. பரசுராமரை (நாராயணனை) பூசிக்க வேண்டும்.
3. ஆனி-வளர்பிறை துவாதசி-ஸ்ரீராம துவாதசி-ஸ்ரீ ராமாவதார விஷ்ணு பூஜை.
4. ஆடி-வளர்பிறை துவாதசி. கிருஷ்ண துவாதசி-ஸ்ரீகிருஷ்ணனைப் பூசிக்க வேண்டும்.
5. ஆவணி-வளர்பிறை துவாதசி. புத்த துவாதசி-ஆபத்திலிருந்து நிவாரணம் பெற இவ்விரதம் செய்யப்படும்.
6. புரட்டாசி-வளர்பிறை துவாதசி-கல்கி துவாதசி-கல்கி அவதார விஷ்ணு பூசை.
7. ஐப்பசி-வளர்பிறை துவாதசி-பத்மநாப சுவாமியைப் பூசித்தல்.
8. கார்த்திகை-வளர்பிறை துவாதசி. விஷ்ணு பிரீதிக்கான வழிபாடு. இது பதிதபாவன தரணி துவாதசி. வராகம் பூமியை ரக்ஷித்தது.
9. மார்கழி-வளர்பிறை துவாதசி-மச்ச துவாதசி-மச்சாவதார நாராயணன் பூஜை.
10. தை-வளர்பிறை துவாதசி. கூர்ம துவாதசி-கூர்மாவதார விஷ்ணு பூஜை.
11. மாசி-வளர்பிறை துவாதசி-சர்வபாப விமோசனம்-வராக மூர்த்தி பூஜை.
12. பங்குனி-வளர்பிறை துவாதசி-நரசிம்ம துவாதசி. நரசிம்மர் பூஜை.
காந்தி விரதம் : கார்த்திகை துவிதியை திதியில் வளர்பிறையில் செய்யப்படுவது. கிருஷ்ணன் (அ) பலராமனைப் பூசித்து வெள்ளி சந்திரன் பதுமைகளைத் தானம் செய்தல்.
அவிக்கின விரதம் : திரிபுரசுரர்களைக் கொல்வதற்கும் முன் சிவபெருமானும், கடலை ஆசமனம் செய்வதற்கு முன் அகஸ்தியரும் இந்த விரதத்தை அனுஷ்டித்தனர். விரதத்தின் பகுதியாகப் பங்குனி மாதம் சதுர்த்தசி திதி அன்று கணேசன் மீது மந்திர உச்சாடனம் செய்வது நலம்.
காம விரதம் : தை மாதம் சுக்கில பக்ஷ பஞ்சமி திதியில் கந்தன் வழிபாடு சிறப்புடையது. முதன்முதலில் இதனை நளன் அனுஷ்டித்தான்.
சாந்தி விரதம் : கார்த்திகை சுக்கில பக்ஷ பஞ்சமி திதியில் சாந்திவிரதம் அனுஷ்டிக்க வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி சாந்தி ஏற்படும். ஓர் ஆண்டுக்கு சூடான உணவைத் தவிர்க்க வேண்டும். முடிவில் சேஷன் பாம்பு வடிவ பிரதிமையை தானம் கொடுக்க வேண்டும்.
ஆரோக்கிய விரதம் : ஆரோக்கிய விரதத்தின் மூலம் மன்னன் அனரண்யன் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட தொழுநோய் நீங்கியது.
புத்ரேஷி விரதம் : சூரசேன மன்னனுக்குப் புத்திர பாக்கியம் அளித்த விரதம் இது. யசோதை மடியில் தவழும் கிருஷ்ணனைத் தியானித்துப் பாலும், தயிரும் தானமாகத் தரவேண்டும்.
23. யுகங்கள்
மன்னன் பத்ரஷ்வனுக்கும், அகஸ்திய முனிவருக்கும் இடையே நடந்த விவாதத்தில் யுகங்கள் பற்றிய கருத்துக்கள் : யுகங்கள் நான்கு பற்றி பல புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இங்கு குறிப்பாகக் கலியுகம் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. கலியுகத்தில் வருணங்கள், வருணாசிரம தருமங்கள் நிலை குலையும். சத்திய யுகத்தில் சத்துவ குணமே ஓங்கி நிற்கும். திரேதா யுகத்தில் சத்துவ குணம் ராஜச குணம் இணைந்து பெருக்கெடுத்தோடும். இருப்பினும் சத்துவகுணமே சிறந்து விளங்கும். துவாபார யுகத்தில் சத்துவகுணத்தை விட ராஜச குணமே மேலோங்கி நிற்கும். கலியுகத்தில் தாமச குணம், அதாவது தீயவை, அறியாமை மட்டுமே இருக்கும். அதனால் வருணசிரம தருமங்கள் கெடும். பாவத்துக்கு பரிகாரமாக தியானம், பிரார்த்தனை, வேதம் படித்தல், யாகங்கள், தானங்கள் செய்யப்படும். பல சமயங்களில் நாரதர் நிரூபித்தப்படி நாராயணன் லீலை அதிசயமானது. உண்மையான பக்தி இன்றி யாகங்களால் மட்டும் நாராயணனை அடைய முடியாது.
சிவபெருமானே கூறினார். தேவர்களில், கடவுளர்களில் நாராயணனே முதலும், முதன்மையும் ஆவார். அவிர்ப்பாகங்கள் முதலில் பெறும் உரிமை அவருக்கே உண்டு. கவுதமரால் விருந்தினராக ஏற்கப்பட்டு உபசாரங்கள் பெற்ற முனிவர்கள் அவரை விட்டு நீங்க எண்ணி அவர் மீது பசுவைக் கொன்ற சாபம் வர ஏற்பாடு செய்தனர். முதலில் கவுதமர் பசுவதையால் மிக்க வருத்தமடைந்தார். பின்னர் அது மாயை என்று உணர்ந்து முனிவர்களைச் சபித்தார். இதனால் பசுவைக்கொன்ற பாவம் நீங்க கவுதமத் தவம் செய்ய சிவபெருமான் தோன்றி தன் சடாமுடிபுரி ஒன்றை அளித்தார். அதனை முனிவர் ஆசிரமத்துக்குக் கொண்டு வர அதிலிருந்து கோதாவரி கங்கை தோன்றி இறந்த பசுவின் மீது பாய பசு உயிர் பெற்றெழுந்தது. அந்தப் புனித நதியைத் தரிசிக்க வந்த சப்தரிஷிகள் முன், தன்னை ஏமாற்றிய முனிவர்களைச் சபித்தார் கவுதமர். அவர்கள் வேதமுறைப்படி யாகங்கள் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதே அச்சாபம்.
அப்போது முனிவர்கள் சாபத்தைக் குறைக்குமாறு வேண்டிட, அதைச் சிவபெருமான் மட்டுமே செய்ய முடியும் என்றார். அச்சாபத்தால் கலியுகத்தில் அவர்கள் பொய்யர்களும், ஏமாற்றுபவர்களும் ஆயினர். கலியுகம் பயங்கரமாக இருக்கப் போகிறது. எனவே அந்தப் பயங்கரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அருளுமாறு அம்முனிவர்கள் வேண்டினர். அதற்கு உதவியாகச் சிவபெருமான் சிவசம்ஹிதை அளித்தார். இவ்வாறு கலியுக மக்கள், முனிவர்கள் சபிக்கப்பட்டனர்.
24. விஷ்ணுவின் ஈடு இணையற்ற தன்மை
அயன், அரனைக் காட்டிலும் அரியே மேலானவர். அவரிடம் சத்வகுணம் மட்டுமே உள்ளது. பிரம்மாவிடம் சத்வ குணம், ராஜச குணம் நிறைந்துள்ளது. சிவனிடம் ஸத்துவ, ராஜஸ, தாமச குணங்கள் மூன்றும் காணப்படும். சிவபெருமானே விஷ்ணுவின் ஈடற்ற தன்மையை ஏற்றுக் கொண்டார். பிரம்மா சிவபெருமானைச் சிருஷ்டி செய்யுமாறு கூறினார். அப்போது அவர் அதற்காகச் சிவன் நீருக்குள் இருந்து தவம் செய்தார். அவர் முன் கட்டை விரல் அளவில் நாராயணன் தோன்றினார். அதனைச் சிவன் நிராகரித்தார். அவர் தவம் தொடர்ந்தது. அடுத்து பதினொன்று பயங்கர உருவங்கள் தோன்றின. அவர்களை யாரென்று பரமன் கேட்க அவை பதிலேதும் கூறாமல் மறைந்துவிட்டன. அடுத்து ஜொலிக்கும், பிரகாசம் மிக்க உருவம் ஒன்று தோன்றியது.
சிவனார் அவரை யார் என்று கேட்க நான் நாராயணன். என் இருப்பிடம் நீர். இதற்கு முன் தோன்றிய பதினொன்று உருவங்கள் ஆதித்தியர்கள். நான் உனக்கு இப்போது தெய்வீகப் பார்வை அளித்ததால் உன்னால் இப்போது என்னைக் காண முடிகிறது. நீ சக்தி வாய்ந்தவன். சர்வஜ்ஞன். மற்ற கடவுளர்களால் பூசிக்கத்தக்கவன். என்னருளின்றி நீ என்னைக் காணமுடியாது என்றார். முதலில் அற்ப உருவில் காட்சி அளித்த விஷ்ணு பின்னர் விச்வரூபம் எடுத்துக் காட்டினார். அவர் தலை இருக்குமிடமே காணமுடியாத அளவுக்கு அவரது பேருரு இருந்தது. இவ்வாறு தன் சக்தியைச் சிவனாருக்குக் காட்டி நாராயணன் திடீரென்று மறைந்து விட்டார். இதன் பயனாகச் சிவபெருமான் நாராயணனே முழுமுதற் கடவுள் எனக் கூறினார்.
25. தவம், பிராயச்சித்தம்
புவிமகள் வராகத்திடம் மனிதன் தன் பாவங்களுக்குப் பரிகாரம் (அ) பிராயச்சித்தம் பெறுதல் எவ்வாறு? என்று கேட்க, வராகம் நியமிக்கப்பட்ட வழியில் என்னைப் பூசிப்பதன் மூலம் பெறலாம் என்றார். நியமிக்கப்பட்ட வழிமுறை : புறத்தூய்மையை நீரால் பெறுதல், விளக்கேற்றுதல், புனித மந்திரங்களை ஜபித்தல். பசுஞ்சாணியால் தரையை மெழுகுதல், விஷ்ணுவின் பிரதிமைக்கு நெய் அபிஷேகம் செய்தல், மலர்கள், மலர் மாலைகள், தூபம், தானியம், பால் நிவேதனம் செய்தல். ஆனால், இவை அனைத்தையும் விடச் சிறப்பாக தூய உள்ளத்துடன் செய்யும் பக்தியை விஷ்ணு விரும்புகிறார். நன்னெறியில் நின்று, விரதங்கள் அனுஷ்டித்து, பெற்றோர்களைக் கவுரவமுடன் ஆதரித்தல் போன்றவை மறுபிறப்பு உண்டாகாமலிருக்க உதவும். கோகமுகம் என்னும் தீர்த்தத்தில் மரித்தவர் மறுபடியும் பறவையாகவோ, விலங்காகவோ பிறக்கமாட்டார். அதை நிரூபிக்க ஒரு கதை காண்பீர்.
பழங்காலத்தில் ஒரு ராஜாளி, மீனவரிடமிருந்து ஒரு மீனை கவ்விக் கொண்டு விண்ணில் செல்ல அதனால் மீனின் பளுவைத் தாங்கமுடியவில்லை. அது கீழே விழுந்து மடிந்தது, மீனும் மடிந்தது. பின்னர் அந்த மீன் அனந்தபுரம் என்ற நாட்டில் இளவரசனாகப் பிறந்தது. ராஜாளியும் ஓர் அழகிய அரசகுமாரியாகப் பிறந்து இந்த இளவரசனை மணந்து சில நாட்கள் கழிய இளவரசன் பயங்கர தலைவலியால் அவதிப்பட்டான். அவர்கள் பெற்றோர்களின் அனுமதி பெற்று கோகமுகத் தலத்தை அடைந்தனர். அவர்கள் அங்கு விஷ்ணுவைத் துதித்தனர். அவர் அருளால் அவர்களின் முற்பிறவி விஷயங்களை அறிந்தனர். இளவரசன் முற்பிறவியில் மீனாக இருந்து விண்ணிலிருந்து கீழே விழுந்து தலை மீது மோதப்பட்டதால் இப்போது தலைவலியால் அவதிப்படுகிறார். விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்து இருவரும் முக்தி அடைந்தனர். அதனாலே கோகமுகத் தீர்த்தம் புகழ்பெற்ற தலம் ஆயிற்று.
பாவங்களுக்கான பரிகாரங்கள்
1. தூய்மையற்ற வாயால் விஷ்ணுவைப் பூசித்தால் அதுவரையில் பெற்றிருந்த புண்ணியமும் போய்விடும். குளிர் இரவில் கட்டாந்தரையில் போர்வையின்றி தொடர்ந்து ஏழு நாட்கள் தூங்கினால் அதுவே அதற்கான பிராயச்சித்தமாகும்.
2. சவத்தைத் தொட்டபின் (அ) மயானத்திலிருந்து திரும்பி வந்த பிறகு விஷ்ணுவைப் பூசித்தால் உண்ணா நோன்பிருந்து அந்தப் பாவத்தை நீக்கிக் கொள்ளலாம்.
3. நியமித சமயச் சடங்குகள் செய்யாமல் விஷ்ணு விக்கிரகத்தைத் தொட்டால் விஷ்ணுவின் அதிருப்தியைப் பெறுவர். இதற்குப் பரிகாரமாகக் கிழக்கு நோக்கி நின்று, கை கால்களை மண்ணால் தூய்மை செய்து தூய்மை ஆகி தியானம் செய்ய வேண்டும்.
4. மன்னன் கொடுக்கும் அரிசியை ஏற்பது பாவம். மன்னன் கோயில் கட்டினால், விஷ்ணு விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தால், தக்க தூய கலத்தில் சோறு ஆக்கி விஷ்ணுவுக்கு நிவேதனம் செய்தால் அவற்றை அனைவரும் அன்னதானமாக ஏற்கலாம். பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் உணவு உண்டால், தொடர்ந்து ஆறு இரவுகள் உண்ணா நோன்பு அனுசரிக்க வேண்டும். அதற்குப் பதிலாக மூன்று நாட்கள் நீர், பால், நெய் உட்கொண்டு ஒருநாள் உபவாசம் இருப்பதும் தக்க பரிகாரமாகும்.
5. சிவப்பு நிற ஆடை, கருப்புத்துணி, அழுக்குத்துணி அணிந்து விஷ்ணுவைப் பூசித்தால் உபவாசம் தக்க பரிகாரமாகும்.
6. மயானம் சென்று வந்து தூய்மையின்றி இருந்தால் திறந்த வெளியில், முள் புல்மேல் ஒரு வாரம் உறங்கி, தன் உணவில் கால் பங்கு மட்டுமே உண்பது விதியாகும்.
26. மாயை
மாயையின் மர்மங்கள் அறிதற்கு எளிதல்ல. விஷ்ணுவைத் தவிர மற்ற எதுவும் மாயையே. அதன் உண்மை நிலையை அறிய இயலாது. இந்த மாயையின் தன்மையை விளக்க வராகம் ஒரு வரலாற்றைக் கூறுகிறது. சோமசர்மா என்ற அந்தணன் விஷ்ணு பக்தன். அவன் உண்ணா நோன்பு, விரதங்கள், தவம் ஆகியவற்றை ஹரித்வாரம் என்ற இடத்தில் இயற்றி வந்தான். பகவான் விஷ்ணு தோன்ற அவரிடம் அவன் மாயையின் உண்மை தன்மையைக் கூறுமாறு வேண்டிட, விஷ்ணு அவனை அருகிலுள்ள ஆற்றில் நீராடி வருமாறு பணித்தார். அவன் உடைகளையும், கமண்டலம், தண்டம் ஆகியவற்றையும் கரையில் வைத்து விட்டு நீராடச் சென்றான். அவன் ஒரு நிஷாதனின் (கீழ் சாதி) மகளாகப் பிறந்து, அதே சாதி ஆண் ஒருவனை மணந்து மூன்று மகன்களையும், நான்கு பெண்களையும் பெற்றான். இவ்வாறு ஐம்பது ஆண்டுகள் தன்னைப் பற்றி அறியாமலேயே வாழ்ந்தாகி விட்டது. முற்பிறவி சோமசர்மா என்பதை உணரவே இல்லை.
ஒருநாள் விஷ்ணு அவளை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அதில் நீராடி வரச்சொன்னார். அவன் ஆடைகளைக் களைந்து ஆற்றங்கரையில் வைத்து விட்டு நீரில் மூழ்கி எழுந்தாள். அப்போது அவன் தன் முன்வடிவ சோமசர்மாவாக வெளிவந்தான். இவ்வாறு சோமசர்மா நீரிலிருந்து வெளிவர அங்கிருந்த ரிஷிகள், முனிவர்கள் அவனை இவ்வளவு நேரமா குளித்து வர? இம்மாதிரி நீண்ட நேரம் எப்போதும் ஆனதில்லையே என்றனர். அவன் தன் நிஷாத பெண்மணியின் வாழ்க்கையை எண்ணி மனவருத்தம் கொண்டான். அந்நிலையில் தான் செய்த காரியங்கள் பற்றி எண்ணிப்பார்த்தான். குழம்பிய மனத்துடன் ஆற்றங்கரையில் அமர்ந்து தன் துக்க நிலையை எண்ணி வருத்தம் கொண்டான்.
நிஷாதன் (சோமசந்தரனின் நிஷாத கணவன்) ஆற்றுக்கு நீராடச் சென்ற மனைவியைத் தேடி வந்து கரையில் அவள் ஆடைகளைப் பார்த்த அவன் அவள் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டாள் என்று எண்ணி வெகு வருத்தம் கொண்டான். இதைக் கண்ட சோமசர்மா அவனுக்கு ஆறுதல்கள் கூறி அவனை வீட்டுக்குத் திரும்பிச் சென்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுமாறும், அவர்களுக்காகத் துன்பத்தை அடக்கிக் கொள்ளுமாறும் கூறினான். சோமசர்மா நடந்ததனைத்தையும் நிஷாதனுக்குச் சொல்ல நினைத்தான். ஆனால் அப்போது அங்கு நிஷாதனோ, அங்கிருந்த கிராமமோ எல்லாம் மறைந்துவிட்டன. அப்போது விஷ்ணு அவன் முன் தோன்றி மாயையில் மூழ்கி இருப்பதைச் சுட்டிக் காட்டினார். மாயை ஆழங்காண முடியாதது. அது மனித அறிவுக்குப் புலப்படாதது. மாயை அறியச் செய்த முயற்சியில் சோமசர்மா துயரங்களை அனுபவிக்க நேர்ந்தது. இதற்கெல்லாம் காரணம் அவன் முற்பிறவியில் ஒரு நெறிமுறை தவறாத பிரமாணனுக்கு மரியாதையும், வணக்கமும் செலுத்தத் தவறினான். விஷ்ணு மறைந்தவுடன், சோமசர்மா குப்ஜாம்ரக மெனும் தீர்த்தத்தை அடைந்து தவம் செய்ய ஆரம்பித்தான்.
27. தீர்த்தங்கள்
அடுத்து வராஹம் தீர்த்தங்கள் பற்றி நிலமாதுக்கு எடுத்துரைத்தார்.
கும்ஜாம்ரக தீர்த்தம் : (குப்ஜ-வளைந்த, ஆம்ர-மா) குப்ஜாம்ரகம் என்றால் வளைந்த மாமரம் என்று பொருள். இந்தத் தீர்த்தத்தில் தவம் செய்த ரைவ்ய முனிவருக்கு விஷ்ணு காட்சி அளித்தார். மாமர வடிவில் விஷ்ணு தோன்றினார். மாமரம் பளுவின் காரணமாக வளைந்து விடாது. அத்தீர்த்தத்தில் நீராடினாலும், அப்பகுதியில் மரித்தாலும் மோக்ஷம் கிடைக்கும். அதனருகில் மாஸை, மாயா என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
சர்வகலிக தீர்த்தம் : இதனருகில் தவம் செய்பவர் நீண்ட காலம் விண்ணுலக வாழ்வை அனுபவிப்பவர். பூர்ண முகம் என்ற இடத்தில் வெந்நீர் ஊற்று ஒன்று உள்ளது. அதில் நீராடுபவர் சந்திர மண்டலத்தில் நீடு வாழ்வர். பின்னர் அந்தணனாகப் பிறப்பர்.
வராக ÷க்ஷத்திரம் : வராக ÷க்ஷத்திரம் ஒரு புனித தலம். இங்குதான் வராகப் பெருமான் பூமியை மீட்டார். திரேதா யுகத்தில், காம்பில்ய இளவரசன் சோமதத்தன். வராக ÷க்ஷத்திரத்தில் ஒரு öண் நரியை வேட்டையில் கொன்று விட, அது மறுபிறவியில் காசியில் இளவரசியாகப் பிறந்தது. கொல்லப்பட்ட பறவை மறுபிறவியில் செல்வம் மிக்க, மதிப்புடைய வைசிய குடும்பத்தில் பிறந்தது.
சக்கர தீர்த்தம் : சக்கர தீர்த்தம் அருகில் உள்ளது. அங்குத் தவம் செய்பவர் உயர்குலத்தில் பிறப்பார். சோமதீர்த்தம் அங்கு உள்ளது. இங்குதான் சந்திரன் தவம் செய்து சோமபானம் அளித்தான்.
அகேதக, கிரதவந்த தீர்த்தங்கள் : வராக ÷க்ஷத்திரத்துக்கருகில் உள்ளன. அங்கு மறிப்போர் இந்திரலோகத்தை அடைந்து வாழ்வர். வைவஸ்வத ஒரு புண்ணியத்தலம். இங்கு சூரிய பகவான் ஓராயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். இதைத் தரிசித்தவர் யமலோகம் செல்ல வேண்டுவதில்லை.
கோகமுக தீர்த்தம் : கோகமுக தீர்த்தத்தில் விஷ்ணு எப்போதும் பிரசன்னமாயிருக்கிறார். இது இமயமலையில் பதரிகாசிரமத்துக்கருகில் உள்ளது. இங்குள்ள பிரம்ம குண்ட பனிநீரில் விஷ்ணு எப்போதும் உறைகிறார். இதில் நீராடுவோர் கோரிக்கை ஈடேறும். விஷ்ணு இங்குத் தியானம் செய்தார். இங்குத் தவம் செய்வோர் விஷ்ணுலோகம் அடைவர்.
மத்ஸ்யசிலா தீர்த்தம் : பதரிகாசிரமத்துக்கருகில் உள்ளது. இங்கு கவுசிக ஆறு பாய்கிறது. இந்தத் தீர்த்தத்தின் பெருமை-இங்கு கண்ணில் ஒரு மீன் பட்டால் விஷ்ணுவின் பார்வைக்குச் சமமாகும்.
பஞ்சஷிக தீர்த்தம் : பஞ்சஷிக தீர்த்தத்தில் ஐந்து நீரோடைகள் உள்ளன. இவற்றில் நீராடினால் அசுவமேதயாக பலன் கிடைக்கும்.
மந்தார எனும் புனிதத்தலம் : விந்தியமலைப் பகுதியில் உள்ளது. அங்கு ஒரு மந்தார மரம் உள்ளது. அது துவாதசி, சதுர்த்தசி நாட்களில் புஷ்பிக்கும். இங்கு விஷ்ணு இருக்கிறார். புஷ்பிக்கும் மரத்தை இங்குக் கண்டவர்க்கு முக்தி ஏற்படும். மேருமலை மீதுள்ள சியமந்தக தீர்த்தத்தில் விஷ்ணு எப்போதும் இருக்கிறார். பிரபன்ன, வைகுண்ட கான நீரோடைகளில் நீராடுவோர் பாவங்கள் நீங்கும்.
சாளக்கிராமம் : சாளக்கிராமம் என்னும் கருப்புக் கல்லில் விஷ்ணு பிரசன்னமாகி உள்ளார். இங்குள்ள லோஹர்கலா தீர்த்தத்தில் விஷ்ணுவின் தங்கப்பதுமை ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் பகவான் விஷ்ணு அநேக அசுரர்களைச் சுதர்சன சக்கரத்தால் அழித்தார். இங்குத் தவம் செய்பவர்கள் பெரும் புண்ணியம் அடைவர். (சாளக்கிராமம் பற்றிய விரிவான செய்திகள் பல புராணங்களில் கூறப்பட்டுள்ளதைக் காண்க.)
28. வடமதுரை
மகாவிஷ்ணுவுக்குப் பிரியமான புனிதத் தீர்த்தமும், தலமும் வடமதுரையே. வடமதுரையின் பெருமையை விரிவாக வராக புராணம் காட்டுகிறது. வடமதுரை மைந்தன் கிருஷ்ணன் அவதரித்த இடம். இது நைமிசாரணியத்தை விடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. வடமதுரையில் உள்ள பிரயாகை, புஷ்கரம், வாரணாசி, விந்துகா, விச்ராந்தி, காம்பில்யா என்பவையும் முக்கிய தலங்களாகும். ஓர் அம்பட்டன் காம்பில்யாவில் யமுனை நதியில் நீராடி மறுபிறவியில் பிராமணாய் பிறந்தான். கொடூரமான கீழ்சாதி வேடன் ஒருவன் நைமிசாரணியத்தில் வசித்து வந்தான். அவன் வடமதுரை சென்று சதுர்த்தசி திதி அன்று யமுனையில் நீராடினான். அதில் மூழ்கி விட்ட அவன் அடுத்த பிறவியில் சவுராஷ்டிராவில் ஒரு க்ஷத்திரியனாக யக்ஷமதனன் என்ற பெயரில் அரசனானான். அவன் எழுபது ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்கப் பல ராணிகள். ஏழு புத்திரர்களும், ஐந்து பெண்களும் பிறந்தனர்.
ஓர் இரவில் அவன் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவனுடைய பிரிய மனைவி பிவாரி அவன் பெருமூச்சு விட்டுக் கொண்டு, முனகி புலம்புதலைக் கேட்டாள். அவனை எழுப்பி வற்புறுத்தி அவனுடைய செய்கைக்குக் காரணம் கேட்டாள். அப்போது அவன், அவள் தன் அரசை மூத்த இளவரசனிடம் அளித்து விட்டு, ராஜபோக வாழ்க்கையைத் துறந்து விட மதுரைக்கு இருவரும் செல்ல அனுமதித்தால் மட்டுமே காரணம் கூறுவதாகக் கூறினான். அவ்வாறே செய்து விட்டு, வடமதுரையை அடைந்து கடவுளைப் பயபக்தியுடன் வழிபட்டு சமயச் சடங்குகளைத் தவறாமல் செய்து வந்தாள். சிலநாட்கள் கழிந்தவுடன் பிவாரி மன்னனிடம் காரணத்தைக் கேட்டாள். அப்போது அவள் தன் முற்பிறவி வரலாற்றைக் கூறினான். அவன் யமுனையைக் கடக்கும்போது ஆற்றில் விழுந்து இறந்ததாகவும், அந்த புண்ணிய நதியினால் அவன் காசிமன்னனின் இளவரசியாய் பிறந்து யக்ஷமதனனை மணந்ததாகவும் கூறினான். அவன் தன் முற்பிறவியிலேயே வடமதுரையை நினைத்துச் செல்ல விரும்பியதே தன் முக்கல் முனகலுக்குக் காரணம் எனக் கூறினான். இருவரும் வடமதுரை அடைந்து அங்கேயே மரித்து விண்ணுலகேகினர். வடமதுரையில் மேலும் பல முக்கிய தலங்கள் உள்ளன. அவை மதுவனம், குந்தவனம், காம்யகவனம், மகாவனம், பிருந்தாவனம், விமலகுண்டம், நாக தீர்த்தம், மானசம், கண்டாபரணம் ஆகியவை.
அக்ரூர தீர்த்தம் : விஷ்ணுவின் விருப்பமான உறைவிடம் இது. அதில் நீராடுவோர் ராஜசூய யாகம் செய்த பலன் பெறுவர். அங்கு நீத்தார்கடன் ஆற்றின் முன்னோர்கள் உடனே விமுக்தி அடைவர். அங்கு சுதானு என்ற வைசியன் வசித்தான். அவன் பக்கத்து வீட்டில் இருந்த அக்னிதத்தா என்ற ஒரு திருடன் இறந்து பேயானான். சுதானு என்னும் அந்த விஷ்ணுபக்தன் ஒரு கோயிலில் விஷ்ணு விக்கிரகத்தின் முன் ஆடிப்பாடிக் கொண்டிருப்பது வழக்கம். ஒரு நாள் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த சுதானுவை அப்பேய் பற்றிக் கொண்டு அவனைத் தின்று விடுவதாகக் கூறியது. சுதானு தான் கோயிலுக்குச் சென்று விஷ்ணுவைப் பூசித்துத் திரும்புவதாக உறுதியாகக்கூற அதுவும் அவனைத் திரும்பிப் போக வேண்டாம் என்று கூறியும் அவன் சொன்ன சொல் தவறமாட்டேன் என்று கூறி கோயிலிருந்து திரும்பிவர, சொன்ன சொல்படி வந்த சுதானுவிடம் பேய், சுதானு தான் பெற்ற புண்ணியத்தை எல்லாம் அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தால், விட்டு விடுவதாகக் கூறிற்று. அவ்வாறே தானம் செய்ய, பேய் தன் அவல நிலை நீங்கப்பெற்றது.
வடமதுரையில் நீத்தார் கடன், சிரார்த்தம் செய்தாலும், வடமதுரையைப் பிரதக்ஷிணம் செய்தாலும் பெரும் புண்ணியம் சேரும். பிரதக்ஷணம் கால் நடையாகச் செய்ய வேண்டும். ஒரு சமயம் ஓர் இளவரசன் குதிரைச் சவாரி செய்து பிரதக்ஷினம் செய்தான். வழியில் மூவரும் மரணமெய்தினர். குதிரையும், சேவகனும் உடனே மோக்ஷம் அடைந்தனர். ஆனால் இளவரசனுக்கு அந்தப் பாக்கியம் கிட்டவில்லை. (ஹய=குதிரை, முக்தி=மோக்ஷம்) எனவே அவ்விடம் ஹயாமுக்தி எனப்பெயர் பெற்றது.
கோவர்த்தனம் : வடமதுரைக்கு மேற்கில் கோவர்த்தனம் உள்ளது. அங்கு வராகாவதார விக்கிரகம் உள்ளது. அது கபில வராகம் எனப்படுகிறது. இதை முதல் முதலில் கபிலர் உருவாக்கினார். அது இந்திரனுக்கு கை மாறியது. இராவணன் அதனை அபகரித்தான். அடுத்து ராமன் கைக்கு மாறியது. வடமதுரைக்கு இன்னல் விளைந்தது. இராமன், லவணன் என்னும் அரக்கனை ஒழிக்க சத்துருக்கனனை அனுப்பினான். லவணனை வென்றதற்குப் பரிசாக கபிலவராகத்தைப் பெற்றான். மற்றவற்றைவிட வடமதுரையில் உள்ள கபிலவராகத்தினைப் பூசித்தல் சிறப்புடையது.
சக்கர தீர்த்தம் : இது கோவர்த்தனத்துக்கு அருகில் உள்ளது. இது இந்திரனுடைய கர்வத்தைக் கிருஷ்ணன் அடக்கினான் என்பதுடன் தொடர்புடையது. பகவான் கிருஷ்ணன் இந்திரபூசையை நிறுத்தி கோவர்த்தன பூசை செய்ய, இந்திரன் பெருமழை பெய்விக்க கிருஷ்ணன் அனைத்தையும் காப்பாற்ற கோவர்த்தனகிரியைக் குடையாய் எடுக்க இந்திரன் அவர் மகிமை அறிந்து அடிபணிந்தான். வட மதுரையின் சிறப்பு பற்றி மற்றொரு வரலாறும் உண்டு. சுபாதன் என்னும் வைசியன் நற்கருமம் ஏதும் செய்யாததால் இறந்து பிரேத வடிவில் திரிந்து வந்தான். ஒரு மரப்பொந்தில் இருந்து வந்த அந்த பிரேதம் அங்கு வந்த விபாதன் என்ற மற்றொரு வைசியனைப் பற்றிக் கொண்டது. விபாதன் பெற்றோர்களுக்குச் சேவை செய்து, தானங்கள் அளித்து, முன்னோர்களுக்கான சமயச்சடங்குகள் போன்ற நற்காரியங்களைச் செய்து வந்த புண்ணியவான். அந்தப் பிரேதம் விபாதனை தனக்கும் சிராத்தம் முதலிய காரியங்களைச் செய்து முடிக்குமாறு வேண்டிட, அவனும் அவ்வாறே செய்திட அப்பிரேதம் விமுக்தி பெற்றது. வடமதுரையில் செய்யப்படும் எந்த சிராத்தமும் பலன் அளிக்காமல் பொய்த்ததில்லை.
அஸி குண்டம் : சுமதி என்னும் மன்னன் எல்லாத் தீர்த்தங்களையும் தரிசிக்க விரும்பினான். ஆனால், அதுமுடியுமுன்பே இறந்து விட்டான். அடுத்து அவன் மகன் விமதி மன்னனானான். அவன் தந்தை விட்ட தீர்த்தயாத்திரையைச் செய்து முடித்து அவன் தந்தைக்குப் புண்ணியம் சேர்க்குமாறு நாரதர் அறிவுரை கூறினார். அவ்வாறு செய்வதை விட வடமதுரையிலேயே இருப்பதே சாலச்சிறந்தது என அவன் எண்ணினான். மற்ற தீர்த்தங்கள் அச்சமுற்று விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு விமதியின் தலையை வாள் கொண்டு வெட்டினார். (அசி=வாள்) எனவே அவ்விடம் அசி குண்டம் என்றாயிற்று. வடமதுரையில் விஷ்ணுவின் (கிருஷ்ணனின்) பாதம்படாத இடமே இல்லை. எங்கும் எதிலும் அவனே உள்ளான். ஒரு சமயம் வடமதுரை வந்த கருடனுக்கு எங்கும் விஷ்ணுவே காணப்பட்டார். அந்த மாயையை நீக்க வேண்டிய கருடனுக்கு மகாவிஷ்ணு வடமதுரையில் எல்லாமே அவரது கண்ணாடி பிம்பங்களே என்று கூறினார். மற்றும் பல, வடமதுரை பற்றி இப்புராணத்தில் காணப்படுகின்றன.
29. கைசிக புராணம்
வராக அவதாரம் எடுத்து பகவான் விஷ்ணு பூமாதேவியை ரக்ஷித்தபோது, பூமாதேவி, பூமியிலுள்ள மக்கள் சம்சாரபந்தம் என்ற கடலிலிருந்து கரை ஏற ஓர் உபாயம் அருளுமாறு கேட்க, பகவான் தன்னைப் பாடி உகப்பித்தால் சம்சாரக் கடலிலிருந்து கரை ஏறலாம் என்று கான ரூபமான உபாயத்தை நம் பாடுவான் என்கிற பரம பாகவதோத்தமனின் சரிதையைக் கூறி மெய்ப்பிக்கிறான்.
நம்பிரான் சரிதம்
திருக்குறுங்குடியில் அலைமகள், நிலமகள் இருபுறமிருக்க பெருமாள் கோயில் கொண்டிருக்கிறான். அவ்வூரின் வெளியில் ஒரு சண்டாளன் பகவத் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் நாடோறும் கையில் வீணையோடு அபர ராத்திரியில் புறப்பட்டு சந்நிதிக்கருகில் அனுமதிக்கப்பட்ட தூரத்தில் நின்று எம்பெருமான் புகழை வீணையோடு இசையுடன் பாடுவது வழக்கம். எம்பெருமான் புகழையே பாடி வந்ததால் இவனுக்கு நம்பாடுவான் என்ற பெயர் வழங்கலாயிற்று. இவ்வாறு பல ஆண்டுகள் நடைபெற்று வர ஒரு கார்த்திகை சுக்கிலபக்ஷ ஏகாதசியன்று ராத்திரி ஜாகரவிரதத்தை உடையவனாய் வீணையும், கையுமாய் திருக்குறுங்குடி எம்பெருமானை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது சோமசர்மா என்பவன் அந்தணனாய் பிறந்தும் யாகம் செய்கையில் தவறு நேர்ந்ததால் பிரம்மாராக்ஷசனாகி அகோர பசி, தாகத்துடன் நின்று கொண்டு, அவ்வழி வந்த நம் பாடுவானை உண்ணப் போவதாகக் கூறிட பற்றற்ற பக்தன் மகிழ்ச்சி அடைந்து தான் கைக்கொண்டிருக்கும் ஜாகர விரதத்தை முடிக்க எண்ணி பிரம்மராக்ஷசிடம் கீழ்வருமாறு கூறினான்.
நீ என்னை உண்டு பசியாறுவதில் எனக்கு மகிழ்ச்சியே. எனினும், நான் திருக்குறுங்குடி பெருமானைப் பாடி உகப்பித்து ஜாகர விரதத்தை முடித்துக் கொண்டு வருமளவும் அவகாசம் கொடுக்க வேண்டும் என வேண்டினான். அப்போது அவன் தப்பிப் போக முயல்வதாக எண்ணி பிரம்மராக்ஷசன் அவனை விடமாட்டேன் என்றது. அப்போது நம் பாடுவான் பல உறுதிமொழிகளைக் கூறிட, அது அவனைப் போக விட்டது. அவனும் தன் விரதப்படி எம்பெருமானைக் கிட்டி, பல பண்களால் பாடி மகிழ்வித்து தன்னுடல் ஒரு நற்காரியத்துக்குப் பயன்படுவது பற்றிச் சந்தோஷத்துடன் விரைந்து வந்து பிரம்மராக்ஷசிடம் தன்னை விரைவில் உண்ணுமாறு கூறினான். இவன் பெருமையைப் பிரம்மராக்ஷசன் அறிந்து அவனைத் தலை வணங்கி தன் பாவம் நீங்கித் தான் நற்கதி பெற பாடுவானின் பாட்டின் பயனைத் தனக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டது. பாடுவான் இசையாதபோது அவன் காலில் விழுந்து அன்றிரவு பாடின பாட்டுக்களில் ஒன்றின் பயனையாவது தனக்குத் தந்து தன்னைக் கரை எற்ற வேண்டும் என்று மன்றாடியது. பாடுவானும் கைசிகப் பண்ணை வைத்துப் பாடிய பாட்டின் பலனை அளிக்க, அதனால் அந்தப் பிரம்மராக்ஷசன் அச்சரீரம் நீங்கி நற்பேறு பெற்றான்.
நம்பாடுவானும் முன் போலவே எம்பெருமானைப் பாடி உகப்பித்துக் கொண்டிருந்த சண்டாள சரீரம் போன பிறகு தேவசரீரம் பெற்று சொர்க்கம் அடைந்தான். அங்கும் பகவானையே பாடிப் பிறகு உயர்ந்த குலத்தில் பிறந்து மோக்ஷம் அடைந்தான். இதனால் சம்சார சாகரத்திலிருந்து கரையேற சுலபமான வழி எம்பெருமானைப் பாடி மகிழ்விப்பதே ஆகும் என அறியலாம்.
நம்பாடுவான் பிரதிஜ்னஞ்சன்
நம்பாடுவான் பிரம்மராக்ஷனிடம் தான் திரும்பி வருவதாக உறுதிமொழி கூறும்போது அவ்வாறு செய்யாவிட்டால் தான் பாவம் செய்தவனாகி நரகம் அடைவதாகக் கூறினான். அவன் பதினெட்டு வகைப் பாவங்களைப் பற்றிக் கூறுகிறான். 1) சத்தியத்தை மீறுதல். 2) மாற்றான் மனைவியைப் புணர்தல். 3) தனக்கும் உடன் உண்போனுக்கும் உணவில் ஏற்றத்தாழ்வு காட்டுவது. 4) பிராமணனுக்கு பூதானம் பண்ணி அதனைத் திரும்பப் பெறுவது. 5) அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து அனுபவித்து, அவளது முதுமையில் அவள் மீது குற்றம் சுமத்திக் கைவிடுவது. 6) அமாவாசை அன்று தர்ப்பண ரூபத்தில் பித்ரு சிராத்தம் செய்து அன்றிரவு மனைவியிடம் சுகித்து இருப்பது. 7) உணவிட்டவனை நிந்திப்பது. 8) ஒருவனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்விப்பதாகக் கூறி, அவ்வாறு செய்யாதது. 9) ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்பது. 10) வாக்களித்தபடி தானம் செய்யாதிருத்தல். 11) நண்பன் மனைவி மீது காமபரவசனாகிப் புணர்தல். 12) குரு பத்தினியையும், மன்னன் மனைவியையும் காமபரவசனாகிப் புணர்தல். 13) இரண்டு மனைவியரை விவாகம் செய்து கொண்டு ஒருத்தியிடம் அன்பு கொண்டு, மற்றவளைத் தள்ளி வைத்தல். 14) கற்புக்கரசியான தன் மனைவியை இளமையில் விட்டு விடுதல். 15) தாகத்துடன் வரும் பசுக்கூட்டத்தைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல். 16) பிரம்மஹத்தியை ஒன்றைச் செய்தவனுக்குப் பெரியோர் இடும் சாபம். 17) வாசுதேவனை விட்டு இதர தேவதைகளை உபாசனை செய்வது. 18) ஸ்ரீமந் நாராயணனோடு மற்ற தேவதைகளைச் சமமாக நினைத்தல்.
மேற்கூறிய பாவங்கள் ஒன்றைவிட மற்றொன்று அதிகபாவம் உடையது. பாவங்கள் அனைத்திலும் மிகக்கொடுமையானது ஸ்ரீமந்நாராயணனையும் இதர தேவர்களையும் சமமாக நினைப்பதே ஆகும். மேற்படி பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக்க வேண்டும் என்பதே வராஹ புராணத்தின் உள்ளீடான கைசிக புராணத்தின் சாரமாகும். இப்புராணம் திவ்ய தேசங்களில் கைசிக ஏகாதசி அன்று இரவில் ஸேவிக்கப்படுவதுடன், திருக்குறுங்குடியில் நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.
வராக புராணம் முற்றிற்று.