தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி, இந்தாண்டு, பிப்., 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை, மலை ஏற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் இந்த வாரத்தில் மேற்கொள்ளப்படும். மலை ஏறும் பக்தர்கள், பிளாஸ்டிக் மற்றும் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.