மூலவர் சிலையை மாற்றி வைத்து குடமுழுக்கு; தோகைமலையில் முருக பக்தர்கள் கொதிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2026 11:01
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகை மலையில், மலை மீது பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்த முருகன் சிலை மீட்கப் பட்டுள்ளது. அதை அகற்றி, அதிகாரிகளுக்கும் விழா குழுவினருக்கும் தெரியாமல் புதிய சிலைக்கு குடமுழுக்கு செய்த சிவாச்சாரியார் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தோகை மலையில், மலை மீது பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி கோவிலில்,கடந்தாண்டு நவ., 27ல் கும்பாபிஷேகம், ஜன., 8ல் மண்டல அபிஷேக விழா நடந்தது. போகர் சித்தர் பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்ட இக்கோவிலில், பால தண்டாயுதபாணி கருவறை சிலை மாற்றப்பட்டு, புதிய மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என, முருக பக்தர்கள் அதிர்ச்சியுடன் கூறி வந்தனர். காட்டுத் தீயாக பரவிய இத்தகவல், பக்தர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது.
இந்நிலையில், தோகைமலை சமூக ஆர்வலரும், பக்தருமான சங்கிலி முத்து, தமிழக முதல்வர், துறை அமைச்சர், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இக்கோவிலில் இருந்த, போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட பால தண்டாயுதபாணி சிலை தனித்துவமானது. இதை பழனி மலை முருகனுடன் முன்னோர்கள் ஒப்பிடுவர். கடந்த 2022ல், இக்கோவிலில் பாலாலயம் செய்வதற்கு முன் இருந்த சிலை, இப்போது இல்லை. பழைய மூலவர் சிலை அகற்றப்பட்டு, புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்து பால தண்டாயுதபாணி கருவறை சிலை, நகைகளை மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தோகை மலை கோவிலில், குளித்தலை கடம்பர் கோவில் அறநிலையத்துறை ஆய்வாளர் மாணிக்கவாசகம், மண்டகபடிக்காரர்கள் மூர்த்தி, மணி, காளியப்பன், மெய்க்காவலர் சேகர், சதீஷ் ஆகியோர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், கோவில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி அளித்த தகவலின்படி, மலை மீதுள்ள குளத்தின் சுனையில் இருந்து, பாலதண்டாயுதபாணி சிலை மீட்கப்பட்டு, தற்போது கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
துாக்கமே வரவில்லை: இதுகுறித்து அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தியிடம், எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,‘‘கோவில் கருவறையில் இருந்த பழைய சிலையால், எங்கள் குடும்பத்தில் யாரும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. மேலும், யாருக்கும் துாக்கமும் வரவில்லை. ‘‘தோகைமலை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் வளமாகவும், நலமுடனும் வாழ, ஆண்டி கோலத்தில் இருந்த தண்டாயுதபாணி சிலையை எடுத்து விட்டு, ராஜ கோலத்தில் உள்ள முருகன் சிலை வைப்பதற்கு முடிவு செய்து, புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாம்பாளையத்திலிருந்து புதிய சிலை வாங்கி வந்து வைத்தேன். ‘‘தொடர்ந்து அபிஷேக ஆராதனை செய்து வருகிறேன்,’’ என்றார்.