பதிவு செய்த நாள்
10
டிச
2021
01:12
புதுடில்லி: பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை கரைகளுடன் விஸ்வநாதர் கோவிலை இணைக்கும் வகையில், 600 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள விஸ்வநாதர் கோவில் வளாகத்தை, பிரதமர் மோடி வரும், ௧௩ல் திறந்து வைக்கிறார்.
ரூ.600 கோடி: உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் தான், பிரதமர் மோடி 2014, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு, விஸ்வநாதர் கோவிலை, கங்கை கரைகளுடன் இணைக்கும் வகையில், 600கோடி ரூபாய் மதிப்பிலான காசி விஸ்வநாதர் கோவில் வளாக திட்டம், 2018ல் துவக்கப்பட்டது. இது, பிரதமர் மோடியின் கனவு திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், கங்கையின் லலிதா படித் துறையில் இருந்து 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை, பிரமாண்ட அருங்காட்சியகம், நுாலகம், பக்தர்கள் தங்கும் மையம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, விஸ்வநாதர் கோவில் வளாகத்தை, பிரதமர் மோடி வரும் 13ல் திறந்து வைக்கிறார்.கடந்த ஆண்டு ஆகஸ்டில், அயோத்தி ராமஜன்மபூமியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அழைப்பு: இந்நிலையில் விஸ்வநாதர் கோவில் வளாக திறப்பு நிகழ்ச்சியை, அதைவிட பிரமாண்டமாக நடத்த உ.பி., அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 13ம் தேதி வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, லலிதா கடற்கரைக்கு படகில் வருகிறார். அங்கிருந்து குடத்தில் கங்கை நீரை சுமந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள நடைபாதை வழியாக விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று, கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, நாட்டின் முக்கியமான துறவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாட்டிலுள்ள ௧௨ ஜோதிர்லிங்க கோவில்களின் பிரதான அர்ச்சகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை மக்கள் கண்டுகளிக்கும் வகையில், மாநிலம் முழுதும் அனைத்து கிராமங்கள், நகரங்களில், ராட்சத திரைகள் அமைத்து, நேரடி ஒளிபரப்பு செய்ய, உ.பி., அரசு ஏற்பாடு செய்துள்ளது. உத்தர பிரதேசத்தில், அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்நிகழ்ச்சி அதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.