பதிவு செய்த நாள்
18
செப்
2012
10:09
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில், அடுத்த ஆண்டு, ஏப்ரலில் நடக்க உள்ள, கும்பாபிஷேக விழாவை யொட்டி, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் உபயதாரர்கள் மூலம், 10 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், முதற்கட்டமாக, கோவிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. கோவில் குளமான கமலாலயத்துக்கு, நிதி ஒதுக்கிச் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர், ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரியது என்ற பெருமைக்குரியது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதம், ஆயில்ய நட்சத்திரத்தில், ஆழித் தேரோட்டம் நடக்கும்போது, ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று, "ஆரூரா... தியாகேசா... என, பக்தி முழக்கமிடுவர். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலுக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். 2001, ஏப்ரல், 9ம் நாள், கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடந்தது. அடுத்த கும்பாபிஷேகம், 2013, ஏப்ரலில் நடக்க உள்ளது. இதற்கென, கோவில் உள் மற்றும் வெளிப்பகுதியில் உள்ள மதில்கள் பழுது நீக்கி, பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பெரிய மதிற் சுவர்கள், மூன்று ராஜகோபுரங்கள், ஆறு சிறிய கோபுரங்கள் என, அனைத்துப் பகுதிகளிலும் திருப்பணிகள் துவங்க உள்ளன. கோவில் வெளியில் உள்ள, ஆரூரான் கல்யாண மண்டபத்தை, 44 லட்சம் ரூபாய் செலவில், அறநிலையத் துறையினர் சீரமைக்கின்றனர். ஆனால், கோவில் வளாகத்தில், சிதிலமடைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க மன்னன் மனுநீதிசோழன் சிலை உள்ளிட்ட, கல்தேர் பகுதிகளையோ, மாசடைந்துள்ள கமலாலயம் தீர்த்தக்குளம் குறித்தோ, யாரும் கண்டு கொள்ளாதது, பக்தர்களையும், பார்வையாளர்களையும் கவலையடையச் செய்துள்ளது.