திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2025 11:08
திருச்செந்தூர்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது ஆவணித்திருவிழா. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 12 நாட்கள் நடைபெறக்கூடிய திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23-ம்தேதி சனிக்கிழமை நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 விஸ்வரூபம் 6.15க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.