இம் மலை கி.பி., இரண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை சமணர்கள் வழிபாட்டுத் தலமாகவும், மலை மீது மூன்று, குகை தளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளது. தவிர பிராமிய கல்வெட்டுகள், கல் படிக்கட்டுகள், மலையடிவாரத்தில் விநாயகர் முருகன் கோயில்களும் உள்ளது. இங்கு கீழவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திருமணம் நடத்துவது வழக்கம். இம்மலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் கூறியதாவது: மெயின் ரோட்டில் இருந்து மலைக்குச் செல்ல 370 மீ., தூரம் பாதை இல்லாமல் தனியார் பட்டா நிலத்தின் வழியாக செல்கிறோம். அதனால் ரோடு அமைக்க முடியாமல் மேடு, பள்ளமாகவும் சேறும், சகதியுமாக உள்ளது. இம் மலையில் ஆராய்ச்சி செய்வதற்காக செல்லும் வரலாற்று துறை மாணவர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் திருமணம் செய்ய வருவோர்கள் மலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ரோடு அமைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதிகாரிகளிடம் மனு கொடுத்ததின் பேரில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்தினர் அளவீடு செய்ததோடு சரி ரோடு போடவில்லை. அதனால் மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு ரோடு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.