வில்லியனுார்; தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி, சாலையில் ஆடுகளை வெட்டி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவு 7:00 மணியளவில் அம்மனுக்கு அபிேஷக ஆராதனை நடந்து வந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழாவை முன்னிட்டு, கிராமத்தில் ஒவ்வொருவர் வீட்டு வாசல் முன்பு சாலையில் ஆடுகளை பலியிட்டனர். ஆட்டு ரத்தத்தின் மீது தேர் செல்வது இந்த கோவிலின் மரபு.
கோவில் நிர்வாகம் சார்பில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் கோவில் வாசலில் முதன் முதலாக 5 ஆடுகளை பலியிட்டனர். தொடர்ந்து, ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் கிராம முழுதும் நுாற்றுக்கணக்கான ஆடுகளை பலியிட்டு, அதன் ரத்தத்தை சாலையில் விட்டனர். குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இக்கோவிலில் அம்மனுக்கு படையலிட்டு ரத்தசோறு சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் பெற்ற வெளியூர் பக்தர்கள் பொங்கலிட்டு, நேர்த்திக்கடனாக கோவில் வாசலில் ஆடுகளை பலியிடுவது வழக்கம். இதனிடையே நேற்று காலை 10:00 மணியளவில் பிடாரி மீனாட்சி அம்மன் தேரோட்டத்தை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., வடம் பிடித்து துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள்உட்பட பலர் பங்கேற்றனர். திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு 25க்கும் மேற்பட்ட ஆடுகளைவெட்டி கறி விருந்து வைத்தனர். இன்று (14ம் தேதி) காலை மீண்டும் தேர் பு றப்பாடும். பிற்பகல் 2:00 மணிக்கு மேல் தேரில் உள்ள சுவாமி அலங்கரிக்கப்பட்டு ராமநாதபுரம் கிராமத்தில் வீதியுலா சென்று வரும்.இரவு 11:30 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 20ம் தேதி இரவு அம்மனுக்கு உதிரவாய் துடைத்தல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.