பதிவு செய்த நாள்
07
செப்
2023
02:09
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசராவில், ஜம்பு சவாரியில் தங்க அம்பாரி சுமக்கும் அபிமன்யூ உட்பட, மற்ற யானைகளின் உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. மைசூரு தசரா திருவிழாவுக்கு, மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. தசராவின் முக்கிய அங்கம் ஜம்பு சவாரி. இதை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும்,லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருவது வழக்கம். மைசூரு நகரில், பெரும்பாலான ஹோட்டல்கள், லாட்ஜ்களில் அறைகள் முன் பதிவு செய்கின்றனர். ஜம்பு சவாரியில், 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உட்பட, மற்ற யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டுள்ளன. நேற்று, இவற்றின் எடை சோதனையிடப்பட்டது. தேவராஜ் மொஹல்லாவின், சாயிராம் எடை மதிப்பீடு மையத்துக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பில் யானைகள் அழைத்து வரப்பட்டன. இங்கு, எட்டு யானைகளின் எடையும் சோதிக்கப்பட்டது. கேப்டன் என, அழைக்கப்படும் அபிமன்யுவின் எடை 5,160 கிலோ, கோபி – 5,080 கிலோ , தனஞ்செயா – 4,940 கிலோ , மகேந்திரா – 4,530 கிலோ , பீமா – 4,370 கிலோ, கஞ்சன்– 4,240 கிலோ, வர லட்சுமி– 3,020, விஜயா – 2,830 கிலோ எடை உள்ளன. அடுத்த கட்டத்தில், வெவ்வேறு முகாம்களில் இருந்து, எட்டு யானைகள் மைசூருக்கு அழைத்து வரப்படும். அதன்பின் யானைகளுக்கு ஒத்திகை துவங்கும். யானைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படும்.