பதிவு செய்த நாள்
30
அக்
2024
12:10
திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தசஷ்டி விழா,வரும் நவ. 2ம் தேதி துவங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், யாகசாலை புறப்பாடு நடக்கிறது. யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா துவங்குகிறது. சிகர நிகழ்ச்சியான 6ம் திருநாளான, நவ. 7ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி, கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7ம் திருநாள் அன்று சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடக்கிறது.
16 இடங்களில் தற்காலிக பந்தல்கள் : பக்தர்கள் வசதிக்காக 16 இடங்களில் தற்காலிக பத்தல்கள் அமைக்கும் பணிவேகமாக நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், சக்கர நாற்காலிகளும் தயார் நிலையில் உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.