பதிவு செய்த நாள்
18
டிச
2012
10:12
தஞ்சாவூர்: அடஞ்சூர் அனந்தீஸ்வரர் கோவில், கர்ப்பக்கிரக கதவு அருகில், கருங்கல்லில், முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் செதுக்கிய அரிய கல்வெட்டை, தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தஞ்சையிலிருந்து, 35 கி.மீ., தூரத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே அடஞ்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள, அனந்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜேந்திர சோழனின், மூத்த மகனான ராசாதிராசனின் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு : தஞ்சை கல்வெட்டு ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழு, அனந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று, அங்குள்ள கர்ப்ப கிரக கதவின் கருங்கல் நிலையில் காணப்படும் கல்வெட்டை, படி எடுத்து ஆய்வு செய்தனர். அந்த கல்வெட்டு, முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் கல்வெட்டு, என்பது ஆய்வில் உறுதியானது. இது குறித்து ஆய்வாளர்கள் கண்ணதாசன், தில்லை கோவிந்தராஜன், ஜெயராமன், அருணாசலம் ஆகியோர் கூறியதாவது: அனந்தீஸ்வரர் கோவிலில், கர்ப்பக்கிரக கதவு அருகே உள்ள கல்வெட்டில், "பாண்டியன் தலையும், சேரலஞ்சாலையும் இலங்கையும் தண்டாற் கொண்ட கோப்பரகேசரி பன்மரான கோ இராசாதிராச தேவர்க்கு யாண்டு பத்தாவது என, வாசகம் துவங்குகிறது. அதில், செதுக்கப்பட்டுள்ள மங்கள வாசகத்தை அறிய முடியவில்லை.
தானம்: இருப்பினும், பாண்டிய குலாசனி வளநாட்டு அடைஞ்சூர் குடி வென்றாழி கணங்குடி அனந்தீஸ்வர மகேஸ்வரக் கண்காணி, ஸந்தி விளக்கெரிக்க பொன் தானம் கொடுத்தது குறித்து அறிய முடிகிறது. அதாவது, முதலாம் ராசாதிராசன் ஆட்சி பொறுப்பேற்று, பத்தாவது ஆண்டில், அவருடைய ஆணையின்படி கோவிலை நிர்வாகம் செய்து வந்த கண்காணி என்பவர் மூலம், பொன் தானம் வழங்கப்பட்டுள்ளது. கதவின் இடதுபுறம் நிலைக் கல்லிலுள்ள கல்வெட்டு வாசகங்களின் தொடர்ச்சி, வலது புறத்திலுள்ள, மற்றொரு நிலைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. ராசாதிராசனின் கல்வெட்டுகளில் மெய்க் கீர்த்திகள் பொதுவாக, "திங்களேர் தருதன் எனவும், "திங்களேர் பெருவளர் எனவும் துவங்கும்.
பரகேசரி : இவ்வாறு, துவங்கும் கல்வெட்டுகளில், "கல்யாணபுரம் எறிந்த விஜய ராசேந்திரன் என்னும் பட்டமும், உடையாளூரில் காணப்படும் கல்வெட்டில், "இராசேந்திர இராசாதி ராசன் எனவும் காணப்படுவதால், தன் தந்தையின் மீதுள்ள அன்பால் ராசாதிராசன் பெயர்சூட்டிக் கொண்டுள்ளது தெரியவருகிறது. ஆனால், முதலாம் ராசாதிராசனின் மெய்க்கீர்த்தி முழுமையும் இடம்பெறாமல், "வெற்றிச்செய்தி மட்டுமே மேற்கண்ட கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. சோழமரபுப்படி, முதலாம் ராசாதிராசனுக்கு ராசகேசரி என்னும் பட்டம் காணப்பட வேண்டும். ஆனால், கல்வெட்டில் பரகேசரி, என உள்ளது. விரிவாக ஆய்வு மேற்கொண்டால், மேலும் பல தகவல்கள் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.