பதிவு செய்த நாள்
18
டிச
2012
10:12
கடலூர்: இந்து அறநிலையத் துறையின் அதிரடி நடவடிக்கையால், கோவில்களின் சொத்துக்களில் இருந்து நீண்ட காலமாக வராமல் இருந்த குத்தகை தொகை வசூலாகத் துவங்கியுள்ளது.தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் ஆன்மிகத்தை வளர்க்கும் பொருட்டு கலை நயமிக்க கோவில்கள் பல கட்டினர். இந்தக் கோவில்களில் தினசரி பூஜை, ஆண்டிற்கு ஒருமுறை திருவிழா மற்றும் கோவிலை தொடர்ந்து பராமரித்திட வசதியாக நிலம், வீடு, வணிக வளாகங்கள் என கோவிலுக்கு எழுதி வைத்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பின்னர் கோவில்கள் அனைத்தும் இந்து அறநிலையத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய் உள்ள பட்டியலைச் சாராத கோவில்களை இந்து அறநிலையத் துறை துணை ஆணையரும், அதற்கு மேல் வருவாய் வரும் பட்டியலைச் சேர்ந்த கோவில்கள் அறநிலையத் துறை இணை ஆணையரும் பராமரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் பட்டியல் இனத்தில் 168 கோவில்களும், பட்டியல் சாராத இனத்தில் 1,400 கோவில்கள் இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளன. இதில், பட்டியலைச் சார்ந்த கோவில்களுக்கு நிலம், வீடு, கடைகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் ஏராளமாக உள்ளன. இதனை தனி நபர்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.கோவில் சொத்துக்களை குத்தகை எடுத்தவர்கள், உரிய குத்தகையை செலுத்தாமல், பல கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதால், பல கோவில்கள் நிர்வாக செலவிற்கே அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது.கடலூரில் உள்ள பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோவிலுக்கு 39.18 ஏக்கர் நஞ்சை நிலம் மூலம் ஆண்டிற்கு 219 குவிண்டால் நெல்லும், 67.45 ஏக்கர் புஞ்சை நிலம் மூலம் 77 ஆயிரம் ரூபாயும், 188 மனைகள் மூலம் 10 லட்சத்து 63 ஆயிரத்து 608 ரூபாயும், 123 கட்டடங்கள் மூலம் 22 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வருவாய் வர வேண்டும்.ஆனால், குத்தகைதாரர்கள் பலர் கோவிலுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
அதில் நஞ்சை நிலம் மூலம் 641 குவிண்டால் நெல்லும், புஞ்சை நிலத்தில் 91 ஆயிரத்து 575 ரூபாயும், மனைகள் குத்தகையில் 38 லட்சத்து 81 ஆயிரம் ரூபாயும், கட்டட குத்தகையில் 74 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 14 லட்சத்து 26 ஆயிரத்து 575 ரூபாய் குத்தகை பாக்கி உள்ளது.இதில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள 9 குத்தகைதாரர்களிடம் இருந்து 41 லட்சம் ரூபாயும், இந்து அறநிலையத்துறை முறையீட்டு மனு செய்துள்ள 26 குத்தகைதாரர்களிடம் இருந்து 28 லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது. இதேநிலைதான் மாவட்டத்தில் உள்ள பட்டியல் இன கோவில்களிலும் நிலவுகிறது. குத்தகை நிலுவைத் தொகை அதிகரித்து வருவதை தொடர்ந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதில், கோவில் சொத்துக்களை குத்தகை எடுத்து நீண்டகாலமாக குத்தகை செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை பெரிய அளவில் "டிஜிட்டல் போர்டு தயாரித்து கோவில் வளாகத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.அறநிலைத் துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து குத்தகைதாரர்கள் பலர் நிலுவைத் தொகையை செலுத்தி வருகின்றனர். இதனால், கோவில்களின் வருவாய் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதே நடைமுறையை அறநிலையத் துறை அதிகாரிகள் பின்பற்றி ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் குத்தகைத் தொகையை நிலுவையின்றி வசூலிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.